இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர்- ஸ்ரீதரன்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சினையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

எனவே, அரசாங்கம் அவர்களையும் உள்ளீர்த்து தேசியப் பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், வடக்கிலோ, கிழக்கிலோ கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை எனவும் யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பகுதியில் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் இராணுவ முகாமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக பரந்தன் கைத்தொழில் பேட்டை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இவற்றில் முதலிடுவதற்கு வெளிநாடுகளில் உள்ள எமது தமிழர்கள் தயாராக உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தத் தொழிற்சாலைகளை மீள இயக்கினால், வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கிகொடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், அரச கூட்டுத்தாபனம், அரச தொழிற்சாலைகள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இவ்வாறு கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைகளையேனும் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறு வடக்கு கிழக்கில் பல பண்ணைகள், தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வடக்கு கிழக்கில் தொழில் சூழலை உருவாக்கும் வாய்ப்புகள் இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக முடக்கப்பட்டு வருகின்றதென குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதனை அரசாங்கம் கருத்திற்கொண்டு அரசியல் ரீதியாகப் பார்க்காது ஜனநாயக அடிப்படையில் செயற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்