மைத்திரி, டலஸ், விமல் அணிகளின் அரசியல் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல், தலைமைத்துவ சபை ஊடாக பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுதந்திர மக்கள் மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த அரசியல் கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தரப்பினருடனான சுதந்திர மக்கள் சபை ஆகியோர் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அடிப்படையில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

கூட்டணி அமைப்பது தொடர்பில இத்தரப்பினருகளுக்கிடையில் கடந்த நாட்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. ஒரு அரசியல் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்காமல் தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்க இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த மூன்று அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்பத்தி தலைமைத்துவ சபை ஒன்றை ஸ்தாகிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்தாபிக்கப்படும் நிறைவேற்று சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 40 சதவீத அங்கிகாரத்தையும், சுதந்திர மக்கள் சபைக்கு 30 சதவீத அங்கிகாரத்தையும், மேலவை இலங்கை கூட்டணிக்கு 30 சதவீத அங்கிகாரத்தையும் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மூன்று பிரதான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்படும் அரசியல் கூட்டணிக்கு ‘சுதந்திர மக்கள் கூட்டணி’என பெயரிட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாரம் வெளியிட்டதும் இந்த பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க உள்ளதாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சிரேஷ்ட தலைவர் குறிப்பிட்டார்.