10 கோடியை செலுத்தாவிடின் மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் – ஹர்ஷண ராஜகருணா

நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து தனது நண்பர்கள் , உறவினர்களிடமிருந்து உதவி பெற்றாவது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்த வேண்டும்.

அவ்வாறில்லை எனில் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட சொத்து விவகாரங்கள் தொடர்பில் எனக்கு தெரியாது. எவ்வாறிருப்பினும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து அவர் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தன்னிடம் இல்லை என்று கூறிக் கொண்டிருப்பதை விடுத்து , உறவினர்கள் , நண்பரிகளிடமிருந்து உதவி பெற்றாவது அவர் அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்க வேண்டும். அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருப்பதால் அக்கட்சியும் முன்னாள் ஜனாதிபதிக்கு உதவ வேண்டும்.

தேர்தல் தொடர்பில் ஆளுந்தரப்பு எதிர்மறையான கருத்துக்களையே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமேயாகும். அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியால் எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூற முடியும்?

நிதி அமைச்சும் , திறைசேரியும் செலவீனங்களுக்கு சரியென்று கூறுகின்ற போதிலும் , அரசாங்கமே அதற்கு எதிர்ப்புக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் மக்களின் இறையான்மையை பாதுகாப்பதற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்.

தேர்தலை நடத்துவதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அரசாங்கம் , ஏதேனுமொரு வழியில் இலஞ்சம் வழங்கியாவது தமது வெற்றியை உறுதி செய்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தேர்தல் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்.

சுயாதீன தேர்தலொன்றை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கான பொறுப்பு பொது மக்களுக்கும் உண்டு.

தற்போது பொதுஜன பெரமுனவும் , ஐ.தே.க.வும் இணைந்து நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் 2000 இலட்சம் (200 மில்லியன்) செலவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினம் கொண்டாடப்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடல்ல.

ஆனால் செலவுகளைக் குறைத்து கௌரவத்துடன் கொண்டாடுமாறு வலியுறுத்துகின்றோம். சுதந்திர தின கொண்டாட்ட செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு தேவையான மருந்துகள் , உரம் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மொட்டு , ஹெலிகொப்டர் இரு அணியிலும் எவ்வித மாற்றமும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தைக் கொண்டுள்ள கட்சியாகும்.

ஜே.வி.பி.க்கு தற்போது பித்துப் பிடித்துள்ளது. அவர்களால் மேடைகளில் பேசுவதற்கு மாத்திரமே முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சின் மூலம் தேர்தலுக்கு முன்னரே வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் உண்மையான முடிவுகள் அதற்கு முரணானதாகவே இருக்கும்.

எனவே ஜே.வி.பி. குறித்து மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 1980 களில் அவரால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் என்றும் மாறக் கூடியவையல்ல. எதிர்பாராத விதமாக இம்முறை ஜே.வி.பி.யை மக்கள் தெரிவு செய்து விட்டால் , 5 ஆண்டுகளின் பின்னர் இவர்களை விட கோட்டாபய ராஜபக்ஷ சிறந்தவர் என்று எண்ணும் நிலைமையே ஏற்படும் என்றார்.