கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும் – பிரதமரிடம் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி உறுதி

இலங்கையின் அவசியத்தேவைகள் குறித்து சீனா ஆராய்ந்துவருவதாகவும், இலங்கை தொடர்பில் சீனா மேற்கொண்டிருக்கும் சிறந்த தீர்மானத்தை வெகுவிரைவில் அறிந்துகொள்ளமுடியும் என்றும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சென் ஸோ தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டப்பிரதிநிதிகளுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் செவ்வாய்கிழமை (17) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சென் ஸோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க சீனா தயாராக இருப்பதாகவும் சென் ஸோ பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளார்.

‘இலங்கை சீனாவின் முக்கிய நட்புநாடாகும். எனவே தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து ஆராய்ந்துவருகின்றோம்.

அதேவேளை எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் பல்வேறு துறைகளிலும் சீனாவின் முதலீடுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, கடன் மறுசீரமைப்பையும் பொருளாதார மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட சென் ஸோ, கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளித்ததுடன் இதுகுறித்து சீனாவின் முன்னணி நிதிக்கட்டமைப்புக்கள் விரிவாக ஆராய்ந்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.