அனைத்துக் கடன்வழங்குனர்களும் இணங்கினால் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார் – அமெரிக்கத்தூதுவர்

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அனைத்துக் கடன்வழங்குனர்களும் இதற்கு இணங்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மேற்கொள்கின்ற கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும், ‘பாரிஸ் கிளப்’ நாடுகளுடன் ஒருங்கிணைந்து உரியவாறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தததுமான கடன் சலுகைகளை வழங்குவதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்துக் கடன்வழங்குனர்களும் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான இணக்கப்பாட்டுக்குவரும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது’ என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்தகால நிதியுதவி செயற்திட்டத்தை அண்மித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த உதவியின் ஊடாக மாத்திரம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்கள் மற்றும் நம்பிக்கையை வலுவூட்டல் என்பவற்றுக்கான ‘செயற்திறன் ஊக்கியாக’ இந்த உதவி அமையும் என்று தெரிவித்துள்ளார்.