ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு சமஷ்டியை ஏற்படுத்துங்கள் – செல்வராசா கஜேந்திரன்

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதனை ஒற்றையாட்சிக்குள் செய்ய முடியாது. ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தி சமஷ்டியை ஏற்படுத்துங்கள்.

அதனை விடுத்து கவர்ச்சிகரமான வசனங்களின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியதாது. ஜனாதிபதி பதவி வகிப்பவர் எந்நிலையிலும் உண்மையை குறிப்பிட வேண்டும் அதனை விடுத்து அப்பட்டமாக பொய்யுரைக்க கூடாது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதுடன் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கும் துரோகமாக கருதப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

ஜனாதிபதியின் உரை எதிர்ப்புகளை ஏற்படுத்தி காத்திருக்கவைத்த உரையாக இருந்த நிலையில் அந்த உரை தமிழ் மக்களை பொறுத்தவரையில் அது நூறு வீதம் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

75 வருடங்களாக புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் சுதந்திர தினம் முடிந்து அவர் அக்கிராசன உரையை மேற்கொண்ட போதும் இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆக்கப்பூர்வமான எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.

ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வுகளை மேற்கொள்ள தயார் என்று கூறியுள்ளார். ஜனாதிபதியாக இருப்பவர் எவ்வேளையிலும் உண்மைகளை கூறுபவராக இருக்க வேண்டும்.

தொடர்ந்தும் அப்பட்டமான பொய்களை கூறிக்கொண்டு இருக்கக் கூடாது. 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க கூட்டமொன்றில் கூறியிருந்தார். அதுதான் உண்மை. 13 ஆவது திருத்தம் தொடர்பில் சில அதிகாரங்களை கையாள முயன்றபோது அது தொடர்பில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒற்றையாட்சிக்குள் உட்சப்பட்ட அதிகாரம் என்று கூறுவது ஏமாற்று கதை என்பதுடன் தமிழ் தரப்புளுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக செய்யும் துரோகமும் சதியுமே ஆகும்.

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதனை ஒற்றையாட்சிக்குள் செய்ய முடியாது.

இதனால் ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தி சமஷ்டியை ஏற்படுத்துங்கள். அதனை விடுத்து கவர்ச்சிகரமான வசனங்களின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியதாது என்பதனை கூறிக்கொள்கின்றேன் என்றார்.