தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை விவகாரம்! வெளியான தகவல்

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கடத்தப்பட்டு படுகொலை
பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில், தினேஷ் சாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

வைத்திய குழு நியமனம்
இந்நிலையில் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்படவுள்ள ஐவர் அடங்கிய வைத்திய குழுவின் உறுப்பினர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் நீதவானால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தக் குழுவின் நியமனத்தின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக இந்த விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.