கனேடிய – அவுஸ்திரேலிய தூதுவர்களிடம் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்ட விடையம்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தச் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (16.03.2023) இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் ஆகியோரை கொழும்பில் நேரில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இரு நாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது, “இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவரையும், புதிய அவுஸ்திரேலியத் தூதுவரையும் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது.

தமிழ் மக்களின் பிரச்சினை

இன்றைய அரசியல் நிலைமை, அரசியல் தீர்வு சம்பந்தமான நிலைமை, பொருளாதார நெருக்கடி நிலைமை, நாட்டைவிட்டுப் பெருமளவிலான மக்கள் வெளியேறும் நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினோம்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கைப் பௌத்த – சிங்கள மயமாக்கும் நோக்குடன் அரசு செயற்படுகின்றமை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல் அரசு இழுத்தடிக்கின்றமை தொடர்பிலும் பேசினோம்.

அரசு கடும் போக்குடன் செயற்படுவதால் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழர் தாயக ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்வை வென்றெடுக்கவும் எம்மாலான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

இந்தக் கருமம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதற்குச் சர்வதேச நாடுகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கனேடிய, அவுஸ்திரேலியத் தூதுவர்களிடம் எடுத்துரைத்தோம்.

அதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.