சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார சவாலை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து மீட்புக்கு ஆதரவளித்து நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

காணொளி ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இதனையடுத்தே அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியம் அங்கீகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடி
2019ஆம் ஆண்டு முதல், கணிசமான வரி குறைப்புக்கள், சீர்திருத்தங்களில் ஏற்பட்ட தாமதங்கள், குறைந்த நாணய கையிருப்பு, அதிக கடன் அளவுகள் என்பன இலங்கையின் நெருக்கடிக்கான காரணங்களாக அமைந்தன.

இந்த நிலையில் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகள் எதுவும் இல்லை. எனவே இந்த சிக்கலைச் சமாளிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவும், ஊழலுக்கு எதிரான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தவும் இலங்கை அதிகாரிகள் உறுதி பூண்டுள்ளனர்.

அதேநேரம் நிர்வாகம் மற்றும் ஊழல் பாதிப்புகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.