இலங்கை விவகாரம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இணையனுசரணை நாடுகள் உள்ளிட்ட சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படுமென பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகைதந்த பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் கடந்த இரு தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ஷ, காஞ்சன விஜேசேகர, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, கொழும்பை தளமாகக்கொண்டியங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன் நீட்சியாக வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குடன் இணைந்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள், நல்லிணக்கம் மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் விவகாரத்தில் அரசாங்கத்தின் உத்தரவாதம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.

அதுமாத்திரமன்றி முகமாலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், அங்கு நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் கண்ணிவெடி அகழ்வுப்பணிகளையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானுக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று முன்தினம் மாலை 7.00 மணிக்கு யாழ் ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது. சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும், புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டிருந்தனர். தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த போதிலும், பிற காரணங்களால் அவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்கவில்லை.

அதன்படி, இச்சந்திப்பில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்தும், அண்மையகாலங்களில் வட-கிழக்குவாழ் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் பிரித்தானிய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்தும், அதற்கு குருந்தூர்மலை விவகாரத்தில் அவர் வழங்கிய தீர்ப்பு மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் பிரதான காரணமாக இருப்பதாகவும் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினர். அதேபோன்று, வட-கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கள் மற்றும் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்தும், புதிதாகவும் நிர்மாணிக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகள் என்பன பற்றியும் இச்சந்திப்பின்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்விடயத்தில் வட-கிழக்கு மாகாணங்களில் முப்படையினர் மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தனியார் காணி அபகரிப்புக்கள் பற்றிய பட்டியல் மற்றும் அவ்விரு மாகாணங்களிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 71 பௌத்த விகாரைகள் பற்றிய பட்டியல் ஆகிய இரு ஆவணங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரித்தானிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானிடம் கையளித்தார்.

அதேபோன்று, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்ட ஆன்-மேரி ட்ரெவெல்யான், அவர் அதனைச் செய்வாரா என்று தமிழ்ப்பிரதிநிதிகளிடம் அபிப்பிராயம் கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், இவ்விடயத்தில் தமக்குப் பல்வேறு சந்தேகங்களும் மாறுபட்ட நிலைப்பாடுகளும் இருப்பதாகக் குறிப்பிட்டனர். 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அபிப்பிராயம் கோரப்போவதாக ஜனாதிபதி கூறியிருப்பதன் மூலம், இவ்விடயத்தில் அவரிடம் உண்மையான அரசியல் தன்முனைப்பு இல்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும், அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திடம் அனுமதிகோரத் தேவையில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், அடுத்த தேர்தல் வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கையைக் காலனித்துவத்தின்கீழ் வைத்திருந்து, தமது ஆட்சிமுறையை இலங்கைக்கு வழங்கிச்சென்ற பிரித்தானியாவுக்கு இவ்விடயத்தில் தலையீட்டு, தீர்வுகாண உதவவேண்டிய தார்மீகக் கடப்பாடு உண்டு என்றும் அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானுக்கு தமிழ்ப்பிரதிநிதிகள் நினைவுறுத்தினர்.

அடுத்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதிர்வரும் ஆண்டு முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என தமிழ்ப்பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரம் சர்வதேச மட்டத்தில் ஒரு பேசுபொருளாக இருப்பதற்கும், அழுத்தம் பிரயோகிக்கப்படுவதற்கும் இவ்வாறான தீர்மானங்கள் முக்கிய காரணமாக இருப்பதனால், இதனைக் கைவிடாது தொடர்வது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய அமைச்சர், இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஏனைய இணையனுசரணை நாடுகள் மற்றும் இலங்கையைச்சேர்ந்த சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கமுடியும் எனத் தெரிவித்தார். இருப்பினும் இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.