அவுஸ்திரேலியாவைவிட எமது அணி சிறந்த நிலையில் இருப்பதால் இன்றைய போட்டியில் திறமையாக விளையாட முடியும் என இலங்கை அணியின் புதிய தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.
இலங்கையும் அவுஸ்திரேலியாவும் தத்தமது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி; அடைந்த நிலையில் லக்னோ எக்கானா விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (16) ஒன்றை ஒன்று எதிர்த்தாடுகிறது.
எனினும் இலங்கை தனது இரண்டு போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்து தோல்விகளைத் தழுவியது.
ஆனால், அவுஸ்திரேலியா தனது இரண்டு போட்டிகளிலும் 200 ஓட்டங்களைப் பெற முடியாமல் மோசமாகத் தோல்வி அடைந்தது.
இரண்டு அணிகளினதும் நிலை குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட குசல் மெண்டிஸ்,
‘அவுஸ்திரேலியா 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததுடன் நாங்களும் 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவினோம். இந்த இரண்டு அணிகளினதும் தோல்விகளை ஒப்பிடும்போது நாங்கள் உயரிய நிலையில் திறமையை வெளிப்படுத்தியிருந்ததை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
‘எமது இரண்டு போட்டிகளில் ஒன்றில் 400 ஓட்டங்களுக்கு பதிலளித்தபோது 320 ஓட்டங்களுக்கு மேல் பெற்றோம். அடுத்த போட்டியிலும் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றோம். எனவே துடுப்பாட்டத்தைப் பொறுத்த மட்டில் அவஸ்திரேலியாவைவிட உயரிய நிலையில் எமது அணி இருக்கிறது.
‘அவுஸ்திரேலியா நாளைய (இன்று) போட்டியை என்ன நேருமோ என்ற சந்தேகத்துடனேயே எதிர்கொள்ளவுள்ளது. அது எமக்கு அனுகூலமாக அமைகிறது. மேலும் அவர்களைவிட நாங்கள் ஒரு குழுவாக உயரிய நிலையில் இருக்கிறோம். எனவே நாங்கள் நம்பிக்கையுடன் களம் இறங்கவுள்ளோம்’ என்றார் குசல் மெண்டிஸ்.
புதிய தலைவர் என்ற வகையில் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடுமா எனக் கேட்டபோது,
‘முதலில் எனக்கு தலைவர் பதவி கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஏற்கனவே தலைவராக விளைளயாடியுள்ளேன். தலைமைப் பொறுப்பு கிடைத்ததற்காக எனது துடுப்பாட்டப் பாணியை மாற்றிக்கொள்ளமாட்டேன். எப்போதும் போல எதிர்காலத்திலும் துடுப்பெடுத்தாடுவேன். அணியின் தேவையை நிறைவேற்றும் வகையில் நான் துடுப்பெடுத்தாடுவேன்’ என பதிலளித்தார்.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவித்த அவர், ஆடுகளத்தின் தன்மையை நன்கு பரிசீலித்த பின்னர் இறுதி அணி தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இது, இவ்வாறிருக்க, உபாதைக்குள்ளாகி உலகக் கிண்ணத்திலிருந்து விலகிக்கொண்ட அணித் தலைவர் தசுன் ஷானக்கவுக்கு பதிலாக சாமிக்க கருணாரட்ன அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட குசல் பெரேராவுக்குப் பதிலாக இன்றைய போட்டியில் திமுத் கருணாரட்ன ஆரம்ப வீரராக களம் இறக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் மதீஷ பத்தரணவுக்குப் பதிலாக கசுன் ராஜித்த அல்லது லஹிரு குமார அணியில் சேர்க்கப்படுவதற்கான அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கையைப் போன்றே தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய முன்னாள் உலக சம்பியன், அவுஸ்திரேலியாவும் இன்றைய தினம் தனது முதலாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது.
எனவே, அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பலத்த அழுத்தத்திற்கு மத்தியில் இன்றைய போட்டியை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா அல்லது திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணராட்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த அல்லது லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க.
அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.