காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் -மட்டக்களப்பில் பொலிஸார் குவிப்பு

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்டோர் கொண்டு வந்து வைத்த புத்தர் சிலை காணாமல் போயுள்ள நிலையில், அங்கு தற்சமயம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் உள்ளிட்டோர் இணைந்து குறித்த மயிலத்தமடு – மாதவனை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை கொண்டு வந்து வைத்திருந்தனர்.

பிரச்சினையை ஏற்படுத்தும் அம்பிட்டிய தேரர்
இந்தநிலையில், குறித்த புத்தர் சிலை நேற்று இரவு காணாமல் போயுள்ளதுடன், அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரால் அங்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதியில் இருந்து சிங்கள குடியேற்றவாசிகளை அகற்றி அவர்களுக்கு அவர்களது பகுதிகளிலேயே இடம் ஒதுக்கி கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில், அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் மறுநாளே அந்த பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைத்து அந்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம் இது எமக்கு சொந்தமான பகுதி என தெரிவித்து உரிமை கொண்டாடியுள்ளனர்.

எனினும், அங்கு வைக்கப்பட்ட புத்தர் சிலை நேற்று இரவு காணாமல் போயுள்ள நிலையில் அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அப்பகுதிக்கு சென்ற அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தலைமையிலான குழுவினர் கரடியணாறு பொலிஸ் பொறுப்பதிகாரியை மிக மோசமான வார்த்தைகளால் பேசியதோடு அந்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகளை தூண்டிவிட்டு அங்குள்ள தமிழ் பண்ணையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.