ரோபோக்களின் வேகம் மனிதர்களை மிஞ்சுகிறதா?

பீஜிங்கில் நடைபெற்று வரும் உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் ‘தியாங்கோங் அல்ட்ரா’ (Tiangong Ultra) மனித வடிவிலான ரோபோ, 100 மீட்டர் தூரத்தை வெறும் 8.86 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (Usain Bolt) 2009ஆம் ஆண்டு நிர்ணயித்த 9.58 வினாடிகள் என்ற மனித உலக சாதனையை விட இது 0.7 வினாடிகளுக்கு மேல் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தத் தொடரின் ஆரம்ப நாளில் இதே ரோபோ 9.39 வினாடிகளில் 100மீற்றர் இலக்கைக் கடந்து உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்திருந்தது.
இந்தநிலையில், தற்போது அரையிறுதிப் போட்டியில் தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து, 100 மீற்றர் துாரத்தை 8.86 வினாடிகளில் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் இதே ரோபோ 21.50 வினாடிகளில் இந்த 100 மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தது.
பீஜிங் ஹியூமனாய்ட் ரோபோ இன்னோவேஷன் சென்டர் (Beijing Humanoid Robot Innovation Center) தயாரித்துள்ள இந்த ரோபோ, பெரிய அளவிலான ரோபோக்களுக்கான பிரிவில் இந்த சாதனையைப் படைத்துள்ளது.
இந்தத் தொடரில் 666 அணிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கால்பந்து, நடனம் மற்றும் தொழில்துறைப் போட்டிகள் உள்ளிட்ட 51 பிரிவுகளில் போட்டியிட்டு வருகின்றன.
100 மீட்டர் ஓட்டம் மட்டுமின்றி, 400 மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர், மற்றும் 2.88 மீட்டர் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட நான்கு மனித உலக சாதனைகளையும் இந்தத் தியாங்கோங் ரோபோக்கள் ஏற்கனவே முறியடித்துள்ளதாக இதன் தயாரிப்பு மையம் தெரிவித்துள்ளது.




