உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு!

வரி செலுத்த வேண்டிய கடப்பாடுகள் இருந்தும், அதனைத் திட்டமிட்டுத் தவிர்க்கும் அல்லது வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டத்தின் கீழ், திணைக்களத்திற்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், விதிகளுக்கு இணங்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும். இந்த புதிய நடைமுறையின் கீழ், வரி செலுத்தத் தவறுபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் ஒன்று வழங்கப்படும். அதன் பின்னர், தமது குறைபாடுகளைச் சரிசெய்ய அவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த 30 நாட்களுக்குள்ளும் வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறினால், அது குற்றமாகக் கருதப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு, 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை, அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படலாம்.
வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், முறையாக வரி செலுத்தும் குடிமக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.




