பலத்த மழை, காற்று, மின்னல் – மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
அத்துடன், அப்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நேற்று (14) காலை 8.30 மணி முதல் இன்று (15) அதிகாலை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல, வஸ்லதாலாராம பகுதியில் 146.5 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேநேரம் நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காற்றானது தென்மேற்கு திசையிலிருந்தோ அல்லது குறிப்பிட்ட திசையின்றியோ மணித்தியாலத்துக்கு 25-35 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அக்கொந்தளிப்பான கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




