ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 8-வது முறையாகக் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இருப்பினும் போட்டியின் நிறைவுக்குப் பின் நடைபெற்ற பரிசளிப்பு விழா மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி ஆசியக் கிரிக்கட் சபை தலைவரும் பாகிஸ்தானின் உள்நாட்டு விவகார அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi)வெற்றி பெற்றதற்கான கிண்ணத்தையும் பதக்கங்களையும் பெற மறுத்துவிட்டது.
இந்த முடிவு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் எடுக்கப்பட்டது என்பதை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் மற்றும் செயலாளர் தேவஜித் சாய்கியா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, போட்டிகள் முடிவடைந்த பிறகு பரிசளிப்பு விழா தொடங்குவதில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதம் ஏற்பட்டது.
மேடையில் நக்வி நின்றுகொண்டிருக்கஇ இலங்கை அணிக்குக் இரண்டாம் இடத்துக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து அதனை பெற்றுக்கொண்டார்.
ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி போன்ற தனிஆள் விருதுகள் எதுவும் மேடையில் வழங்கப்படவில்லை.
இந்திய வீராங்கனைகள் பரிசளிப்பு மேடைக்கு வரவில்லை.
இதன்போது துணைத் தலைவரான காலித் அல் ஜரூனி மூலமாகவோ அல்லது வெற்றி பெற்ற சபையின் பிரதிநிதி மூலமாகவோ கிண்ணத்தை வழங்கலாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும், அதனை நக்வி ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியிலும் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய ஆடவர் அணி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2025 ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய – பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக இருநாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் பரஸ்பர கைகுலுக்கலைத் தவிர்ப்பது போன்ற கட்டுப்பாடுகளை இந்திய அணி பின்பற்றி வருகிறது.
இந்தநிலையில், இந்திய வீராங்கனைகள் மைதானத்தில் தங்கள் சொந்தக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு ஆடை மாற்றும் அறைக்குத் திரும்பினர்.
அத்துடன் தாங்கள் செம்பியன்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




