புதிய விளையாட்டு சட்ட மூலம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முறையான வரைவு தயாரிக்கப்பட்டு புதிய விளையாட்டு சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய சட்ட கட்டமைப்பு மற்றும் விளையாட்டு நிர்வாகத்தின் தற்போதைய கட்டமைப்பை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இந்த நிபுணர் குழு அறிக்கையின் முதன்மையான பரிந்துரைகளில் ஒன்று, தற்போதுள்ள சட்டத்தை முழுமையாக மாற்றுவதற்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைக்குழுவை நிறுவுவதாகும்.

விளையாட்டுக்கள் தொடர்பான கொள்கை தயாரிப்பு மற்றும் மேற்பார்வை செய்யும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

8 அடிப்படை நோக்கங்களை அடைய இந்த தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைக்குழுவை அமுல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் பதவிக்காலம் 4 வருடங்களாகும், அதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நியமனங்களை அரசியலமைப்பு சபைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.