பிள்ளையான் வியாழேந்திரன் மீது -செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கேள்வி

அரசாங்கத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கால்நடை பண்ணையாளர்கள் படுகின்ற துன்பங்களை நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை சம்பந்தமாக நேரடியாக அவர்களை சந்திக்க நேர்ந்தது.

உண்மையில் இந்த அரசாங்கமானது திட்டமிட்டு இந்தப் பண்ணையாளர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களை ஓரங்கட்டி அவர்களுடைய உடைமைகளை இல்லாதொழிக்கின்ற திட்டத்தோடுதான் செயற்படுகின்றது என இந்தப் பண்ணையாளர்கள் கவலை தோய்ந்த முகங்களோடு கூறுகின்ற நிலையை பார்க்கின்றபோது அரசாங்கமானது திட்டமிட்டு செய்கின்ற நிலைப்பாட்டை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி தான் வெற்றி பெற்றவுடன் கூறிய விடயம் நான் சிங்கள மக்களால் வென்றிருக்கின்றேன் என்பதாகும். ஒரு நாடு ஒரு சட்டம் என அவர் சொல்கின்ற விடயம் காணாமல் போயிருக்கின்றது.

எங்களுடைய தமிழர்களின் பிரச்சினை மேலும் மேலும் வலுவாகிக் கொண்டிருக்கின்ற அதேவேளை எங்களுடைய நிலம், மண் எங்களுக்கு இருந்தால் தான் எங்களுடைய உரிமையும் இனமும் பாதுக்காக்கப்படும் என்ற நிலைமையை நாங்கள் வைத்திருக்க முடியும்.

எங்களுடைய போராளிகள் இந்த மண்ணிற்காகத்தான் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தார்கள். இப்பொழுது முழுமூச்சாக வெளிப்படை தன்மையாக இந்த அரசாங்கம் தனது மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை செய்து வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்திலே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக இருக்கின்ற பிள்ளையானிடமும், கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற வியாழேந்திரனிடமும் நான் ஒரு கேள்வியை கேட்கின்றேன்.

இந்த மக்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்? நீங்கள் இந்த மண்ணை காப்பாற்றுவதற்கான செயற்பாட்டை கட்டாயம் செய்தாக வேண்டும்.

எங்களுடைய கால்நடை பண்ணையாளர்கள் படுகின்ற துன்பங்களை நீங்கள் நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும். இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான வாக்குகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த கடமையும் பொறுப்பும் உங்களிடம் இருக்கின்றது. ஏனென்றால் நீங்கள் அரசாங்கத்தோடு இருக்கின்றீர்கள்.

இந்த அரசாங்கம் எங்களுடைய நிலங்களை கபளீகரம் செய்கின்றது. ஆனால் நீங்கள் கூட்டமைப்பை தாக்குவதும், தேவையில்லாத கதைகளை கதைப்பதுமாக தான் உங்களுடைய செயற்பாடுகள் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.