தற்போதைய சூழலை விடவும் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா வைரஸின் தாக்கம் மோசமானதாக இருக்கலாம் என்று மைக்ரோசொப்டின் இணை நிறுவுநர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரங்களில், அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா தொற்றுக்கள், இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனாவைக் கையாள்வதில் அமெரிக்கா ஒரு சிறப்பான முறையில் செயற்படும் என்று தாம் நினைத்ததாக கேட்ஸ் சிஎன்என் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் தொற்று நோய் ஒன்று தொடர்பாக முன்னறிவிப்புகளைச் செய்தபோது, இறப்புகள் அதிகமாக இருப்பதைப் பற்றி குறிப்பிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வைரஸ் அதைவிட அதிக ஆபத்தாக மாறியுள்ளது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பொருளாதார தாக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாம் செய்த கணிப்புகளை விட மிக அதிகமாக உள்ளன என்று அவர் கூறினார்.
கொரோனா இதுவரை அமெரிக்காவில் 290,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது.
இச் சூழ்நிலையில் தனது அறக்கட்டளை தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளுக்கு நிதியளித்து வருவதாக பில் கேட்ஸ் கூறினார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜோர்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் தடுப்பூசி குறித்த செய்தி மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக கூறியுள்ளதாக பில் கேட்ஸ் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் கிடைத்த போதிலும், அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் அமெரிக்கர்கள் தங்களால் முடிந்ததை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்ஸ் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவின் புதிய நிர்வாகம் உண்மையான நிபுணர்களை நம்புவதற்கு தயாராக உள்ளது. அவர்கள் தெளிவான திட்டங்களைத் தீட்டுகிறார்கள். எனவே இதை சாதகமான
வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார விதிகளை உரிய முறையில் பின்பற்றினால், கொரோனா இறப்புகளில் பெரும் சதவீதத்தை தவிர்க்க முடியும் என்று பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.