புதிய சிந்தனையுடன் செயல்பட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய வேண்டும் எனவும், பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதிய சிந்தனையுடன் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் வருடங்களில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 7.5 மில்லியனாக அதிகரிப்பதற்கு சுற்றுலாத் துறையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (27) நடைபெற்ற இலங்கை ஹோட்டல் சங்கத்தின் 58 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் ஹோட்டல் துறைக்கு ஆற்றிய சேவைகளுக்காக ஸ்ரீலால் மித்தபால மற்றும் ஹிரான் குரே ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“அரசாங்கத்தைநான் பொறுப்பேற்கும் போது, கடன் நிலைபேற்றுத் தன்மையை நிலைக் கச் செய்வது மாத்திரம் போதாது என்பதை உணர்ந்தேன்.

அன்னியச் செலாவணியை நாம் எவ்வாறு ஈட்டிக்கொள்வது மற்றும் எவ்வாறு ஒரு நேர்மறையான வர்த்தக சமநிலையை உருவாக்குவது என்பதில் கவனம் செலுத்தப்பட்ட து. அதன்போது பல ஆலாசனை கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நாம் இதை அடைவதற்கு எளிதான வழி சுற்றுலாத் துறைதான்.

அதன்படி, சுற்றுலாத் துறையை முழுமையாக மேம்படுத்தி வருகிறோம். அதற்கு நாம் தற்போதைய கட்டமைப்பிற்கு வெளியே செல்ல வேண்டும். அங்கு நாம் போட்டித் தன்மையுடன் இருக்க வேண்டும்.

இலங்கை ஹோட்டல் சங்கம் இன்று தனது 58 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. வியட்நாம் போன்ற நாடுகளில் உள்ள ஹோட்டல் சங்கங்களைப் பொறுத்தவரை, நிறுவப்பட்ட காலம் 20 முதல் 30 ஆண்டுகளாக இருக்கலாம்.

ஆனால், நம்மை விட அவர்களுக்கு எப்படி அதிக சுற்றுலாப் பயணிகள் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கு எழும் கேள்வி. அதற்கிணங்க, இந்த நேரத்தில் சுற்றுலாத் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதுதான் இப்போது சிந்திக்கப்பட வேண்டும்.

முதலில் இந்த நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இந்த ஆண்டு சுமார் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்நிலைமை சிறப்பாக உள்ளது என்று கூறலாம். ஆனால் அடுத்த ஆண்டு அது 2.5 மில்லியனாக இருக்க வேண்டும்.

அத்துடன், வருடாந்தம் இந்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரண்டாவதாக, ஒரு சுற்றுலாப் பயணியிடம் இருந்து எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்றும் அந்தத் தொகையை எப்படி அதிகரிப்பது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், குறைந்த பட்சக் கட்டணக் காலத்திலிருந்து நீங்கி, நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்கான முறையான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

சுற்றுலாத் துறையில் நாம் மிக உயர்ந்த தரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நமது சுற்றுலாத்துறை சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும். அவை இன்றி சுற்றுலாத்துறையில் வளர்ச்சி அடைய முடியாது. நம்மிடம் பல திறமைகள் உள்ளன. ஆனால் அந்த திறன்களை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை.

நமது உணவுக் கலாசாரத்தைப் பார்த்தால், அது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வேறுபடுகின்றது. நீங்கள்அதைப் பயன்படுத்தியிருக்கி றீர்களா? எனவே எமது உணவுக் கலாசாரத்தில் உள்ள வேறுபாட்டை சுற்றுலாத்துறைக்குக் கொண்டு செல்வோம்.

சுற்றுலாத் துறை நமக்கு புதிய விடயமல்ல. அது அநுராதபுர யுகத்திலிருந்தே ஆரம்பமானது என்பதைக் கூற வேண்டும்.

ஒரு பருவ காலத்தில் இலங்கைக்கு கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணி அடுத்த பருவ காலம் வரும் வரை இலங்கையில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அப்போது அநுராதபுரத்தில் “சிவப்பு விளக்கு வலயங்கள்” கூட இருந்ததாக கூறப்படுகிறது.

நான் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அந்தக் காலங்களில் அவர்கள் தங்களின் வழிமுறைகளில் சுற்றுலாத்துறை பற்றி சிந்தித்திருப்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

விருந்தோம்பலை சுற்றுலாத் துறையின் சிறந்த திறவுகோலாகக் குறிப்பிடலாம். சுற்றுலாப்பயணிகளுக்கு கிடைக்கும் தங்குமிடம், அவர்களுக்குக் கிடைக்கும் ஏனைய வசதிகள் மற்றும் உணவு பற்றியும் குறிப்பிட வேண்டும்.

மேலும், நமது சமையல் திறனை விரிவுபடுத்த வேண்டும். இலங்கை உணவு மட்டுமல்ல வெளிநாட்டு உணவுகளையும் அங்கு அறிமுகப்படுத்தலாம்.

முதலாவது, ஸ்பெயினில் உள்ள பெயெல்லா முதல் ஜப்பானின் அரிசி வரை முழுமையான அரிசி வகைகளையும் எமது சமையல் வகைகளில் அறிமுகப்படுத்தலாம். மற்றும் நாம் எமக்கே உரிய கலவையையும் ஏற்படுத்த முடியும்.

2003-2004 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட புட்டிக் ஹோட்டல் தற்காலத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது.

மேலும், நாம் பிரவேசிக்ககூடிய பல சந்தை வாய்ப்புகளும் உள்ளன. கொல்ப் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் அதேநேரம், நாட்டின் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அத்துடன், கொழும்புக்கு வரும் சுற்றுலா பயணிகளை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தற்போது கொழும்புக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கங்காராம விகாரை, அருங்காட்சியகம், சுதந்திர சதுக்கம் உள்ளிட்ட சில பகுதிகளை மாத்திரமே பார்வையிடக்கூடியதாக உள்ளது.

அவர்களை கொழும்பில் தக்க வைப்பதற்காக பொழுதுபோக்கு, இசை மற்றும் உணவு அம்சங்களை கொண்ட புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.

எதிர்காலத்தில் கொழும்பு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கம் வரையிலான பகுதி புதிய முறையில் மாற்றியமைக்கப்படும்.

தற்போதும் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக கண்டி போகம்பரை சிறைச்சாலை வளாகத்தை பயன்படுத்துவது தொடர்பான முன்மொழிவுவொன்று கிடைத்துள்ளது.

அத்துடன் கொழும்பு, கண்டி உட்பட நாட்டில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இதுவரை கவனம் செலுத்தப்படாத பல இடங்கள் உள்ளன. அவ்வாறான இடங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அதற்காக புதிய முறையில் சிந்திக்க வேண்டும். பழைமையான சிந்தனைகள் ஊடாக அந்த இலக்கை அடைய முடியாது. சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்ப்பது பற்றிய புதிய சிந்தனைகள் அவசியப்படுகின்றன.

அதனூடாகவே நாம் ஐந்து மில்லியன் இலக்கை வெல்ல முடியும். குறைந்தது 500 – 600 டொலர்கள் வரையில் செலவு செய்யக்கூடிய ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொள்ள வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியும். அதற்கான கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது.

ஒரு வரையறைக்குள் இருந்து சிந்திக்க கூடாது. உங்களால் அதனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை அடைந்த பின்னர், அதிக வருமானம் ஈட்டும் 7.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை நோக்கிச் செல்ல முடியும்.

அதன் போது, 750 – 1000 டொலர்கள் வரையில் செலவிடக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுற்றுலா,காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எல்.எம்.பீ.பீ.ஹேரத், இலங்கை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் எம்.சாந்திகுமார் உள்ளிட்ட ஹோட்டல் துறைசார் நிபுணர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.