நாட்டின் பிரஜையொருவரின் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்கு உதவுங்கள் என்று பிறிதொரு நாட்டிடம் கோருவது மிகவும் இழிவானதாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கான இறுதிக்கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.
அந்தப் பதிவை மேற்கோள்காட்டி, மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் அந்தப் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,
‘மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பது உண்மையெனும் பட்சத்தில், எமது நாட்டின் பிரஜையொருவரின் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்கு உதவுங்கள் என்று பிறிதொரு நாட்டிடம் கோருவது மிகவும் இழிவானதாகும். நாட்டின் அனைத்து பிரஜைகளும் தமது நம்பிக்கைகளுக்கு அமைவான இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்’ என்று மங்கள சமரவீர அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.