மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப முயற்சி-கூட்டமைப்பு சாணக்கியன் ஆதங்கம்

மக்கள் சார்ந்த பிரச்சனைகளை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கரடியனாறு குசலானமலை கிராமத்தில் தொல்பொருள் தொடர்பாக எழுந்த பிரச்சினையினை ஆராய்வதற்கான கள விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் வன ஜீவராசிகள் மற்றும் தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் அங்கு எழுந்த எதிர்ப்புக் காரணமாக குறித்த பகுதியிலிருந்து திருப்பியனுப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் காணப்படும் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையை ஆராயச் சென்ற இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கும், தமிழ்த் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீ நேசன் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் சென்று எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் இதுகுறித்து இன்று இரா.சாணக்கியன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“அங்கு திடீரென்று வருகை தந்த அமைச்சர், எனக்கோ அல்லது அங்குள்ள மக்களுக்கோ அறிவிக்கவில்லை. ஏற்கனவே அமைச்சருடன் கொழும்பில் நடந்த சந்திப்பொன்றின் போது தொல்பொருள் சம்பந்தமான பிரச்சனைகள் பற்றியும் மற்றும் காணிகள் அபகரிக்கப்படுவதை எடுத்துரைத்த அதேவேளை அமைச்சர் இங்கு வந்து நேரடியாக எம்மையும், பாதிக்கப்பட்ட மக்களையும் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்டவர்களையும் அழைத்து பிரச்சனைகள் சம்பந்தமாக நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பேசி தீர்மானிப்பதாக உறுதியளித்தார்.

ஆனால் இவரது திடீர் வருகையானது எனக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியதன் காரணமாகவே அங்கு நான் சென்றேன். அவருடன் எமது மாவட்டத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சரும் வந்திருந்தார்.

இவர் வர இருப்பதை சிறிது நேரத்துக்கு முன்னரே அறிந்த நான், அவரை சந்திக்க பல வகைகளில் நடவடிக்கை எடுத்திருந்தேன். அவற்றுக்கும் முறையான பதில் எனக்கு கிடைக்கவில்லை. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் அங்கு சென்றிருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை தொல்பொருள் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆனால் தொல்பொருள் சார்ந்த இடத்தை அடையாளப்படுத்தும் போது அது 40 மீட்டர் ஆகவா அல்லது 400 மீட்டர் என்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரிகளும் அங்கு எந்தவிதமான முன் அறிவித்தலும் தராமல் வருகை தந்தது சந்தேகத்துக்கிடமான நிலையிலேயே நான் அங்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.

அத்துடன் முறைசார் இன்றி இடப்பட்டிருக்கும் எல்லைக் கற்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ் விடயத்தில் உறுதியாக நான் இருக்கின்றேன்.

அங்கு மட்டக்களப்பினைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சருக்கு சார்பாக வந்திருந்த சிலரின் வார்த்தை பிரயோகங்கள் தாறுமாறாக இருந்தது. அவர்களின் வார்த்தைகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பார்த்து கதைப்பது போல் இல்லாமல் சண்டித்தனம் செய்வது போலவே செயல்பட்டனர்.

இன்றையதினம் சில சிங்கள ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பிரசுரித்திருப்பதை காண முடிந்தது. அவர்கள் எமது பிரச்சனையை வேறு வழியில் திசை திருப்ப முற்படுகின்றனர். மக்கள் இவற்றை மற்றும் எமது கோரிக்கைகளை சரியான முறையில் பகுப்பாராய வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.