இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி – கேர்னல் ஆர் ஹரிஹரன்

சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது.

சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப்பும் சீன-பாக் நல்லுறவை மேலும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தினால், இருநாடுகளின் பாதுகாப்பு சித்தாந்தத்தின் அடிப்படையான “இந்திய எதிர்ப்பு” என்ற குறிக்கோள், மேலும் பலமடைந்துள்ளது. அதனால், சீன-பாகிஸ்தான் போர்ப்படைகள் இந்தியாவை எதிர்த்து ஒருங்கிணைந்து, ஒரே சமயத்தில் இருமுனைப் போரை நடத்தும் முயற்சி மேலும் எளிதாகி வருகிறது. பாகிஸ்தானில் உருவாகும், சில்க் ரோடின் அங்கமான, சி. பி. இ. சி (சீன, பாகிஸ்தான் பொருளாதரப் பாதை) திட்டம், சீன மற்றும் பாகிஸ்தான் படைகள் இந்தியாவை எதிர்த்து இரு போர்முனைகளிலும் ஒன்றாக செயல்படும் அபாயத்தை அதிகரித்துள்ளன.

இந்தியா, சீனாவின் சில்க் ரோடு திட்டத்தில் சேர திட்ட வட்டமாக மறுத்த பின்பு, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் செயல்பாடுகளில், இந்திய எதிர்ப்பு மேலும் வெளிப்படையாகவே வெளியாகிறது. அதன் ஒரு உருவகமே, தற்போது கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவங்களிடையே நிலவும் பதட்ட நிலையாகும். பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து, பாக் தீவிரவாதிகள் ஊடுருவலை உசுப்பி விடவும், உலக அளவில் பாகிஸ்தான் தொடுத்துள்ள இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை அதிகரிக்கவும், சீனா இந்தியாவுக்கு கொடுக்கும் போர்முனை அழுத்தம், மேலும் பாகிஸ்தானை ஊக்குவித்துள்ளது.

கடந்த நாற்பது ஆண்டுகளில், சீனா, பாகிஸ்தான் ராணுவ வலிமையை பல்வேறு விதங்களில் வலுவாக்கியுள்ளது. முக்கியமாக அணு ஆயுதம், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றை பாகிஸ்தானில் உற்பத்தி செய்வதில் சீனாவின் பங்கு இன்றியமையாததாகும். சில ஆண்டுகளாக, சீனாவின் ஆதிக்க ஆளுமைகளால், தெற்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்பு சூழ்நிலை மாறி வருகிறது. அதை சமாளிக்க, இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாகி வருகின்றன. அதற்கேற்ப, சீன-பாக் பாதுகாப்பு உறவுகளின் நெருக்கமும் அதிகமாகி வருகிறது.

ஆகவே, இந்தியா, வளர்ந்து வரும் சீன-பாக் உறவுகளை, முக்கியமாக பாதுகாப்பு உறவை, தொடர்ந்து கவனத்துடன் கண்காணித்து வருகிறது. சீனாவின் கை பாகிஸ்தானில் ஓங்குவதை, சீனாவின் தேவைகளுக்கு ஏற்ப, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் பல உள்நாட்டு மாற்றங்களை செய்து வருவது காட்டுகிறது. உதாரணமாக, சீனா, பாகிஸ்தானில் பெரும் பணம் புழங்கும் சி.பி.இ.சி திட்டத்தின் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் நிலவுவதாக அதிருப்தி தெரிவித்தது. உடனே, பிரதமர் இம்ரான் கான், தனது வலது கரமாக ஆலோசனையாளராக செயல்பட்டு வந்த, முன்னாள் ராணுவ உயர் அதிகாரியான, லெப்டினென்ட் ஜெனரல் அசிம் சலீம் பாஜ்வா-வை சி. பி. இ. சி செயலாக்க கட்டமைப்பின் தலைவராக நியமித்தார். ஏற்கனவே, ஊடகங்களில் பாஜ்வா பல பொருளாதார ஊழல்களில் ஈடுபட்டுள்ள செய்திகள் வந்தது, வேறு விஷயம்! அது போலவே, சீனாவின் விருப்பத்துக்கு இணங்க, பாகிஸ்தான் ஆக்கிரமப்பில் உள்ள, காஷ்மீரின் அங்கமான கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை, அரசு ஒரு தாற்காலிக மாநிலமாக மாற்றியுள்ளது. இந்தப் பகுதி வழியாகவே, இருநாடுகளையும் இணைக்கும் காரகோரம் பெருவழிச்சாலை செல்கிறது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில், சீனாவின் பாதுக்காப்பு அமைச்சர் ஜெனரல் வேய் ஃபெங்-கே நவம்பர் மாதக் கடைசியில், தனது நேபாளப் பயணத்தை முடித்துக் கொண்டு, பாகிஸ்தான் பயணத்தை மேற் கொண்டது குறிப்பிடத்தக்கது. சீன அமைச்சர் சீன-பாக் நல்லுறவை வளர்க்க செய்த சேவையை பாராட்டி, பாகிஸ்தான் அதிபர் டாக்டர் அரீப் ஆல்வி, அவருக்கு நிஷான்-ஏ-இம்தியாஸ் (உயர்) என்ற உயரிய பட்டத்தை அளித்து கௌரவித்தார். ஜெனரல் வேய் ஃபெங்-கே, பாக் ராணுவத் தலைவர் ஜெனரல் பாஜ்வாவை சந்தித்து, புதிய சீன-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அப்போது, இருவரும் பிராந்திய பாதுகாப்புக்கான தங்கள் நாடுகளின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, அதை மேலும் வலுப்படுத்த ஆலோசனை மேற்கொண்டதாக பாக் ராணுவ செய்திகள் கூறின.

தற்போது இந்திய எல்லையின் அருகே, சீனா-பாகிஸ்தான் விமானப்படை விமானங்களும், படை வீரர்களும் தமது ஒருங்கிணைந்து செயல்படும் திறனை அதிகரிக்க, “ஷாஹீன்-9” என்ற விமானப் போர் பயிற்சி டிசம்பர் 9ந் தேதி துவங்கியது. பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் உள்ள பொலாரி விமானப்படை தளத்தில் ஆரம்பித்த இந்தப் பயிற்சி, டிசம்பர் கடைசி வரை நீடிக்கும். பயிற்சியின் ஆரம்ப நிகழ்ச்சியில், சீன விமானப்படையின் உப தலைவர் மேஜர் ஜெனரல் சுன் ஹாங், மற்றும் பாகிஸ்தான் விமானப்படை (போர்முறை) உதவித் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் அஹமத் சுலேரி பங்கு பெற்றனர். அப்போது, பயிற்சியின் குறிக்கோளைக் குறித்து பேசிய சுலேரி, பொதுப்படையாக இரு தரப்பு படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை அதிகரிக்கவும், மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கவும் அது உதவும் என்று கூறினார். ஆனால், சீன ஜெனரல் இந்தப் பயிற்சி போர் முனை செயல் திறனை அதிகரிக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் உள்ள நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த, இரு நாட்டு விமானப்படைகளும் 2011ம் ஆண்டிலிருந்து, இத்தகைய கூட்டுப் பயிற்சியை நடத்தி வருகின்றன. இருந்தாலும், தற்போது இந்திய-சீன எல்லையில் எட்டு மாதங்களாக தொடரும் பதட்டமான பாதுகாப்பு சூழ்நிலையில், இந்த ஆண்டு நடக்கும் பயிற்சி முக்கியமானதாகும். ஏனெனில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 26ல், இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, பல நூறு கிலோமீட்டர் எதிர்ப்பு ஏதும் இல்லாாமல் பறந்து சென்று, பாலாகோட் என்ற இடத்தில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி கேந்திரத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தி இழப்பு ஏதும் இல்லாமல் திரும்பின. இந்த சம்பவம், பாகிஸ்தானுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே. அந்த கலக்கத்தைப் போக்க, சீனாா பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

இந்த கூட்டுப் பயிற்சியில் எந்த ரக விமானங்கள் பங்கு பெறுகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும், சீனவின் 4ம் தலைமுறை போர் விமானங்களான ஷென்யாங் ஜே-11, பல வித போருக்கான செங்டூ ஜே-10, ஊடுருவலைத் தடுக்கக்கூடிய செங்டூ ஜே-7 ஆகியவற்றைத் தவிர, சீன-பாகிஸ்தான் கூட்டு முயற்சியில் உருவாக்கப் படும் ஜே-17 ‘தண்டர்’ போர் விமானமும் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு ஊடகச் செய்தியின்படி, இதுவரை நடந்த விமான கூட்டுப் பயிற்சிகளில், இந்த முறை நடப்பது மிகவும் சிக்கலானதும், முக்கியமானதாகவும் ஆகும். ஒட்டு மொத்தமாக, 50 போர் விமானங்கள் பயிற்சியில் பங்கு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா டுடே-வின் செய்தி பொலாரி பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்களின் தளமானாலும், இந்த கூட்டுப் பயிற்சியில் அவை ஈடுபடுத்தப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் எப்-16 போர் விமானங்களை அமெரிக்காவின் பொருளுதவியடன் வாங்கியதாகும்.

ஆகவேதான், அந்த போர் விமானங்களை, சீனாவடன் நடத்தும் பயிற்சியில் ஈடுபடுத்தி, அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவதற்கு பாகிஸ்தான் தயக்கம் காட்டுகிறது என்று கூறப்படுகிறது. இது, சீனாவுடன் எவ்வளவுதான் பாதுகாப்பு ஒத்துழைப்பு அளித்தாலும், பாகிஸ்தான் அமெரிக்காவை முழுவதுமாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது என்பது ஊடகவியலாளர்கள் கருத்து.

ஆகவே, இந்தியா அமெரிக்காவுடன் நான்கு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகளை திடப்படுத்தியுள்ள போது, சீனவும், பாகிஸ்தானும் இருமுனைப் போரை நடத்துவது என்பது எளிதல்ல. அதற்கான, பாதுகாப்பு அழுத்தங்கள் அந்த இருநாடுகாளுக்கும், இன்னமும் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால், அதற்கான சூழ்நிலை உருவானால், இரு நாடுகளும் இருமுனைத் தாக்குதலை நடத்த தயங்கமாட்டார்கள் என்பதை, சீனாவும் பாகிஸ்தானும் இதுவரை எடுத்துள்ள கூட்டுப் பாதுகாப்பு முயற்சிகள் காட்டுகின்றன.

அத்தகைய இரு முனைத் தாக்குதலை, இந்தியா எவ்வாறு எதிர் கொள்ளலாம் என்பதை, இன்னொரு கட்டுரையில் ஆராயலாம்.

கேர்னல் ஆர் ஹரிஹரன், இந்திய ராணுவத்தின நுண்ணறிவுத் துறையில், தெற்காசிய நாடுகள் மற்றும் தீவிரவாதப் பிரிவுகளில் அனுபவம் பெற்றவர். அவர் சென்னை சீன ஆய்வு மையத்தின் அங்கத்தினர் ஆவார்.