சம்பிக்கவின் புதிய திட்டம்! துணைத் தலைவர் பதவியை வழங்க தயாராகும் சஜித்

ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வியத் மக போன்ற அறிஞர்களின் அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கல்வியில் படித்த அறிஞர்களை ஒன்றிணைத்து இந்த அமைப்பை உருவாக்க அவர் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவர் பதவியையும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு வழங்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பிக்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கட்சியின் உத்தேச யாப்பில் துணைத் தலைவர் பதவி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கட்சியின் புதிய யாப்பு தற்போது வரைவு செய்யப்பட்டு, அடுத்த வாரம் நிர்வாக சபைக்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.

புதிய யாப்பில் துணைத் தலைவர் பதவி மட்டுமே உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற சர்வாதிகார யாப்பை உருவாக்க கூடாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு பொருத்தமான யாப்பை உருவாக்குவதன் மூலம் ஒரு ஜனநாயக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.