கட்டாயத் தகனத்தை எதிர்த்து பொரளை மயானத்துக்கு வெளியே கிறிஸ்தவ பாதிரியார்கள் அமைதி வழியில் போராட்டம்

கொவிட்-19க்குப் பலியானவர்களின் உடலங்களை கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பொரளை மயானத்துக்கு வெளியே இன்று அங்கிலிக்கன், கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு வெளியிட்டனர்.

மனித உரிமை ஆர்வலர் ருகி பொ்னாண்டோ இது குறித்துக் கூறுகையில், 20 நாள் குழந்தை பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக எரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இலங்கையில் கட்டாயத் தகனத்தை நிறுத்தக்கோரியும் பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

“கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும் ஆகும். இதற்காகத்தான் எங்கள் கிறிஸ்தவக் கடமையைச் செய்ய இன்று காலை நாங்கள் சென்றோம்” என அவர் கூறினார்.

பேராசிரியர் மலிக் பெரேரா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கொவிட்-19 பாதித்து இறந்தவர்களை அடக்கம் செய்வதன் மூலம் சுகாதார ஆபத்தில்லை என்று கூறியதையும் சில கிறிஸ்தவர்கள் கட்டாயத் தகனங்களை எதிர்ப்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

இதேவேளை வைரஸ்கள் உயிருள்ள உயிரணுக்களில் மட்டுமே பிரதிபலிக்கின்றன என்றும் இறந்த உடலிலிருந்து பரவுவது மிகவும் குறைவு என்றும் கொவிட்-19 நோயால் இறந்த உடல், நோய் பரவுவதற்கான முக்கிய ஆதாரம் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.