உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பாராட்டுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று தெரிவித்தார்.
2019 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவிலேயே பேராயர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடுவபிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 24 வீடுகள் திட்டத்தின் பணிகள் இதுவரை நிறைவடைந்த இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து விரைவில் நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்துக்கு பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.
மேலும், காணி உரிமை கொண்டுள்ளவர்களுக்காக மேலும் 5 வீடுகள் கட்டுவபிட்டிய பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்டு கொழும்பை அணிமித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் 33 குடும்பங்களுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடப்பட்ட வீட்டுத் திட்டத்திலிருந்து 33 வீடுகளை ஒதுக்கித் தருமாறு பிரதமர் இதன்போது தகவல் வழங்கினார்.
இம்மக்களுக்கு மேலதிகமாக பதுளை, கண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்காக அந்தந்த பிரதேசங்களில் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது தொடர்பில் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக ஸ்ரீ ஜயவர்தன வைத்தியசாலையால் பெற்றுக் கொடுக்கப்படும் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அறிவுறுத்திய பிரதமர், அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை அறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கினார்.
இதற்கு மேலதிகமாக நிதி அமைச்சின் ஒதுக்கீடுகளைக் கொண்டு தற்போது நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள கடுவபிடிய அறநெறி பாடசாலையை 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை செலவிட்டு நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தல், தாக்குதலில் சேதமடைந்த கொச்சிக்கடை தேவாலயத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி கடற்படைக்கு ஒதுக்கீடுகளை மேற்கொண்டு நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கும் பிரதமர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த அரசாங்கம் கொச்சிகடை தேவாலயத்தை ஒரு புதிய வடிவமைப்பில் நிர்மாணித்து தருவதாக குறிப்பிட்ட போதிலும், அந்தவகையில் நிறைவுசெய்யப்படாமை குறித்த சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டது.
கடந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதை மாத்திரமே செய்தது. ஆனால், நாம் உண்மையாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
தாக்குதலினால் பாதிக்கப்பட்டு கடன் தவணைகளைச் செலுத்த முடியாத, அது குறித்து இதுவரை கோரிக்கைகளை முன்வைத்துள்ள நபர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய கடன் நிவாரணங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுடன் கலந்துரையாடுமாறு பிரதமர், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களில் காணப்படும் பிரச்சினைகள் அருட்தந்தை லோரன்ஸ் ராமநாயக்கவால் இச்சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டது.
கலந்துரையாடலின் நிறைவில் அங்கு கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டதாவது,
பிரதமர் அவர்களே, நான் உங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தனிப்பிட்ட ரீதியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு எமக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில், விசேடமாக இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது மக்கள் பாதிக்கப்பட்டமையினாலேயே நாம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றோம். எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு உங்களது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் தலையீட்டுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம். அது குறித்து நாம் பிரதமர் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்பாடு செய்தமை குறித்தும் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கொழும்பு உதவி பேராயர் வண. ஜே.டீ.அந்தனி ஆண்டகை, வண. அருட்தந்தைமார்களான ஃப்ரீலி முத்துகுடஆராச்சி, ஜுட் சமந்த பெர்னாண்டோ, தவடகே கிஹான் றிட்லி டெரன்ஸ் பெரேரா, லியனகே பட்ரின் லலித் பெரேரா மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான நிமல் லான்சா, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, இந்திக்க அனுருத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலகத்தில் ஊழியர் பிரிவு தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி.ஜயரத்ன, கட்டான பிரேதச சபையின் தலைவர் எம்.நந்த விஜேரத்ன சில்வா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரேணுக பெரேரா, அரச பொறியியலாளர் கூட்டத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி களுபஹன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் என்.பீ.கே.ரணவீர உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.