நாடாளுமன்றை மலினப்படுத்த வேண்டாம் – கரு ஜயசூரிய

நாடாளுமன்றை மலினப்படுத்தக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதலே அதன் அபாயங்களை பற்றி தாம் எச்சரிக்கை விடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் கௌரவத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது அது தபாற் கந்தோரின் நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றின் அதிகாரத்தை விஞ்சி சென்றிருப்பதாகவும் இதன் ஓர் கட்டமாகவே பொதுச் சேவைகள் ஆணைக்குழுவை கலைப்பதற்கு ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் அனுப்பியதனை கருத வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினை ரத்து செய்ய வேண்டுமாயின் அமைச்சரவையில் அனுமதி பெற்றுக்கொண்டு நாடாளுமன்றின் ஊடாக அதனை செய்வதே சாலச் சிறந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேச்சாதிகார போக்கில் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதும் அதனை நிறைவேற்றுவதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரண்பாடானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.