எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிய குற்றவாளி – நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், கல்முனை கடற்கரையில் தலைமறைவாகியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 07 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குற்றவாளிக்கு 75,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 18 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

கிண்ணியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி 13 வயதான சிறுமி 50 வயது நபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது பிரதிவாதி தலைமறைவாகினார்.

எனினும், பிரதிவாதியின்றி வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ளதுடன், மேற்கொள்ப்பட்ட மரபணு பரிசோதனையில் பிரதிவாதியே குழந்தையின் தந்தை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மன்றில் சாட்சியமளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதியை குற்றவாளி என அறிவித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நேரடி பணிப்புரையில், உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கல்முனையில் தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.