ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டம் – அறிவிப்பு வெளியானது

ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த ருவிற்றர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடுப்பூசி தொடங்கும் எனவும் மக்கள் பாதுகாப்பை முழுமையாகத் தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் டிசம்பர் 27ஆம் திகதி தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் அறிவித்தருந்தார்.

அத்துடன், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் கொரோனா தடுப்பூசித் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டதை்த தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் ஃபைசர் – பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்து வரும் 21ஆம் திகதி வரை மதிப்பீடு செய்யவுள்ளதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஃபைசர் – பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.