அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது. நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் செய்யும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“உஸ்ம தெனதுரு” 20 இலட்சம் மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் காசல்ரீ நீர் தேக்கப் பகுதிக்கு அண்மித்த லெதண்டி தோட்டத்தில் மர கன்றுகள் இன்று நாட்டப்பட்டது.
இப்பகுதியில் உள்ள நீர் வளம், வன வளம் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன், பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் உதவியுடன், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த மர நடுகை வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் அதிகாரிகள், இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள், சுற்றாடல் துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம்.சி.சி. உடன்படிக்கை இனி கைச்சாத்திடப்படாது. அதிலிருந்து அமெரிக்காவும் விலகிவிட்டது. எம்.சி.சி. உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது எனக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த கொள்கை தொடர்ந்தும் பின்பற்றப்படும். வேறு வடிவில், வேறு பெயரில் வந்தால் கூட ஏற்பதற்கு தயாரில்லை.
எது எப்படியிருந்தாலும் அமெரிக்காவுடனான எமது இராஜதந்திர உறவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அது அவ்வாறே தொடரும். அமெரிக்காவும் இதனை அறிவித்துள்ளது.
நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மாத்திரமே இந்த அரசாங்கம் செய்யும். தீங்கு விளைவிக்ககூடிய எதனையும் செய்யாது.
அதேவேளை, கொரோனா வைரஸ் முழு உலகுக்கும் சவாலாக அமைந்துள்ளது. நாம் முதலாவது அலையை கட்டுப்படுத்தினோம். 2ஆவது அலையையும் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கினால் 2ஆவது அலையையும் இலகுவில் கட்டுப்படுத்தலாம். எந்தவொரு முயற்சியையும் நாம் கைவிடவில்லை.
அமைச்சர்களுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடும் ஜனநாயக உரிமை மக்களுக்கு இருக்கின்றது. அமைச்சர்கள் என்பவர்கள் சர்வ பலம் படைத்தவர்கள் அல்ல.
சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும். அதனை நாம் பெறுவோம். மோதுவதைவிட பேச்சுவார்த்தை மூலம் பயணிப்பதே சிறப்பு. பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
அத்துடன், தேர்தல் முறையில் மாற்றம் அவசியம். விருப்பு வாக்கு போட்டி இல்லாத தேர்தலையே மக்கள் விரும்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.