46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை – அமெரிக்க தூதுவர்

30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை

• சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம்

• புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக இருக்கும் என்று இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தினை இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு அதிலிருந்து வெளியேறுவதாகவும் பகிரங்கமாக கடந்த மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அறிவித்து விட்டது.

இதன் காரணமாக, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட 30/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அத்தீர்மானத்தினையே மீளவும் முன்னெடுப்பதற்காக (Rollover) 34/1, 40/1 தீர்மானங்கள் தலா இரண்டு வருட கால இடைவெளில் நிறைவேற்றப்பட்டிருந்தன.

எனினும் இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்திலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அதே தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை அதாவது அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவருவதால் பயனில்லை என்றும் அமெரிக்க தூதுவரர் அலைனா டெப்லிஸ் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவர் அலைனா டெப்லிஸ், அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி அடம் சுமித் ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பின்போதே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்தச் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

ஐ.நா தீர்மானம்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதனால் பொறுப்புக்கூறப்பட வேண்டிய விடயங்களை மீண்டும் வலியுறுத்துவதற்கான உரிய பொறிமுறையொன்று வகுக்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலையும், சர்வதேசத்தின் பிரசன்னத்தினையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு இடமளிக்க முடியாது.

கடந்த அரசாங்கம் 30/1 தீர்மானத்தில் சில விடயங்களை முழுமையாக இல்லாது விட்டாலும் முன்னெடுத்திருந்த நிலையில் அவ்விடயங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் அதேநேரம், 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமாக தமிழ் மக்களின் சில விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என்று சுமந்திரன் தூதுவரிடத்தில் எடுத்துரைத்தார்.

அதன்போது, “இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தினை நிராகரித்து அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், அத்தீர்மானத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் தீர்மானமொன்றை கொண்டுவருவதால் பயனில்லை.

ஆகவே இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்காக “புதிய பிரேரணையே” கொண்டுவரப்பட வேண்டியதாகின்றது.

அவ்வாறு புதிய பிரேரணை கொண்டுவரப்படுவதற்கான இயலுமான நிலைமையே தற்போதுள்ளன. எனவே அத்தகையதொரு பிரேரணை கொண்டுவரப்படுகின்றபோது 30/1 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டவற்றுக்கு மேலதிகமான விடயங்களை உள்ளீர்க்க முடியும்.

அவ்விதமாக உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை நீங்கள் தயார் செய்யுங்கள்” என்று அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான பொறிமுறை எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பில் பரஸ்பர கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

அச்சமயத்தில், சுமந்திரன் சிரியா, மியன்மார் போன்ற நாடுகளின் விடயத்தில் ஐ.நா, உட்பட சர்வதேச தரப்புக்கள் செயற்பட்ட முறைமைகள் தொடர்பில் தாம் கரிசனை கொள்வதாக கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு

இதனைத்தொடர்ந்து, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற நம்பிக்கை, மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பாக அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அதன்போது, புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஏற்கனவே இடைக்கால அறிக்கை வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பணிகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நிபுணர்குழு பரிந்துரைகளை எதிர்பார்த்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான கோட்பாட்டு ரீதியான முன்மொழிவுகளுடன் உத்தேச வரைபொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அரசியல் தீர்வு தொடர்பாக நாம் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். தீர்வுத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்திருக்கின்றோம்.

தற்போதைய நிலைமையில் சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்மொழிந்த “பிராந்தியங்களின் ஒன்றியம்” என்ற தீர்வையே ஆகக்குறைந்ததாக பரிசீலனை செய்ய முடியும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது என்று சுமந்திரன் எம்.பி பதிலளித்தார்.

சமகால நிகழ்வுகள்

அதனைத்தொடர்ந்து, ஜனநாயகப் பண்புகள் மதிக்கப்பட வேண்டியமை, மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் பேணப்படவேண்டியவை உள்ளிட்ட சமகால நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு தமிழர்கள் வியடத்தில் அமெரிக்கா கரிசனையுடன் பக்கபலமாக இருக்கும் என்றும் தூதுவரால் நம்பிக்கை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.