ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் முன்வைப்பதற்கென சுமந்திரனால் முன்மொழியப்பட்ட திட்ட யோசனையை விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடியோடு நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட ஜெனிவாவுக்கான முன்மொழிவு யோசனையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடியோடு நிராகரித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் ஜெனிவா அமர்வு தொடர்பில் கூட்டாக செயற்படுவதற்கான முன்மொழிவு யோசனை ஒன்றை தயாரித்து, விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகிய இருவருக்கும் அவர்கள் தரப்பு கருத்துகளை அறியும் வகையில் சுமந்திரனால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுமந்திரனுக்கு அனுப்பிய பதிலில் குறித்த திட்ட யோசனை இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக் கொடுப்பதாகவே அமையும் என்பதை சுட்டிக்காட்டி அடியோடு நிராகரித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது ஐ.நா.வினால் விசேடமாக உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் ஆயத்திற்கு இலங்கை விடயத்தைக் கொண்டு செல்லுமாறு ஐ.நா. பொதுச் சபையையும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலையும் கோருமாறு தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு ஏன் கோரக்கூடாது என்றும் அதற்கு தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் அனைதது தமிழ்க் கட்சிகளது ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பதில் வழங்குவதாக தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதனை நிராகரிப்பதாக சுமந்திரனுக்கு பதிலளித்திருப்பதாக அறியமுடிகின்றது.
சுமந்திரனின் குறித்த திட்ட வரைபில், இருதரப்பு போர்க்குற்றம் என்ற விடயத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டிருப்பது, தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து சர்வதேசத்தை கையாள்வது என்ற பெயரில் மறைமுகமாக இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக்கொடுப்பதுடன் சார்வதேச ஆதரவையும் தொடர்ந்து வழங்க வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதே, அதனை இரு தரப்பும் அடியோடு நிராகரிக்கக் காரணம் என அறியமுடிந்தது