மர்மமான முறையில் உயிரிழந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூன்றாம் வருட மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காகப் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் பதிவு குறித்து சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் சந்தேகம் எழுப்பிய நிலையில் மேலதிக பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில், வன்னியசிங்கம் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் வசித்து வந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் தூக்கில் தொங்கிய நிலையில் கால்கள் இரண்டும் நிலத்தில் முழந்தாளிட்ட வண்ணம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், சந்தேகத்துக்கிடமான இம்மரணம் தொடர்பான விசாரணையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்துமாறு அவருடைய சகோதரன் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருக்குக் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மரணமடைந்த பல்கலைக்கழக மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராக்களைப் பார்வையிடுவதற்கும், அவர் பயன்படுத்திய தொலைபேசியைப் பரிசீலனை செய்வதற்கும் மன்று உத்தரவு வழங்கவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தார்.
இதை ஆராய்ந்த நீதிவான் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராவின் பதிவுகளையும், குறித்த மாணவன் பயன்படுத்திய தொலைபேசிப் பதிவுகளையும் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கோப்பாய் பொலிஸாரால் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சி.சி.ரி.வி. கமராவின் காட்சிகள் நீதிமன்றத்துக்குச் சமர்பிக்கப்பட்டன.
இதன்போது குறித்த பதிவில் சடலம் மீட்கப்பட்ட கடந்த மாதம் 17ஆம் திகதி நண்பகல் பெறப்பட்ட பதிவு மாத்திரமே இருக்கின்றது என மரணமடைந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இதையடுத்து கடந்த மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் முழுமையான பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.