ஜனாஸா எரிப்புக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பொரளை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாஸா எரிப்புக்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் முஸ்லிம்களின் உரிமையை அரசு பறிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனாவால் உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்ய முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள போதிலும், அரசு வேண்டுமென்றே முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், முஸ்லிம்களின் நல்லடக்க உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக களத்தில் இறங்கிப் போராட வேண்டியது பிரதான எதிர்க்கட்சியான தங்களின் கடமை என்றும், அந்த கடமையை சரியாக நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.