பூநகரியில் கவன ஈரப்ப்பு போராட்டம்: பிரச்சினைகள் அடங்கிய மகஜரும் கையளிப்பு

கிளிநொச்சி இரணைதீவு மக்கள் எதிர்கொள்ளும் சவால்களிற்கு தீர்வு பெற்று தருமாறு கோரி பூநகரியில் கவன ஈரப்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், பிரச்சினைகள் அடங்கிய மகஜரும் பிரதேச செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் யாழ் மன்னார் வீதி ஊடாக பூநகரி பிரதேச செயலகம் வரை சென்றது.

தொடர்ந்து பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரனிடம் இரணைதீவு மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான மகஜரும் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள் குறிப்பிடுகையில், இரணைதீவிற்கு சீமெந்து உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல கடற்படையினர் அனுமதிப்பதில்லை எனவும், பெண்கள் இரணைதீவிற்கு செல்வதை கடற்படையினர் தடுத்து வருவதாகவும், இரணைதீவில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களை தமது பாதுகாப்பு தேவைகளிற்காக பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையிலிருந்து தமது தீவிற்கு சுதந்திரமாக சென்றுவர அனுமதிக்குமாறும் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.