வேறு ஒருவரின் கடவுச்சீட்டில் கனடா செல்ல முயற்சித்த யாழ். யுவதி கைது

வேறு ஒருவரின் கனேடிய கடவுச்சீட்டை மாற்றி அமைத்து, அதனை பயன்படுத்தி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் துபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதி ஒருவர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரை சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த யுவதி எமிரோட்ஸ் விமானத்தில் துபாய் செல்லும் நோக்கில் இன்று அதிகாலை 2.45 கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்கான அட்டையை பெற்றுக் கொள்ள யுவதி கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.

கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் கொண்ட எமிரேட்ஸ் விமான சேவையின் அதிகாரிகள், பெண் வழங்கிய ஆவணங்களை மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

யுவதி வழங்கிய கனேடிய கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதிக்கும் போது, யுவதியிடம் அது குறித்து மேலதிகமான கேள்விகளை கேட்டுள்ளனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட உடனடியான பரிசோதனையில், யுவதி சமர்பித்த கடவுச்சீட்டு வேறு ஒருவருடையது எனவும் அதில் இந்த யுவதியின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியாக கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமை தெரிவந்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த கடவுச்சீட்டில் குத்தப்பட்டிருந்த இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முத்திரை போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன் பின்னர் குடிவவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் யுவதியை கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் இயங்கும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.