சம்பந்தனுக்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கின் அரசியல் சூழல் எப்படியிருக்க போகிறது?

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் முக்கிய அரசியல் கூட்டணியாக காணப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவி, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தனியான அரசியல் கட்சியாக பதிவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட வேண்டும் என அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் பல வருடங்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றன எனினும் அதற்கு, தமிழரசுக் கட்சி இனங்காத நிலையில் அந்த முரண்பாடுகளும் தொடர்கின்றன.

குறிப்பாக ஐந்து கட்சிகள் ஒன்றாக இணைந்திருந்த காலத்திலேயே, தமிழரசுக் கட்சி ஒத்துழைக்காவிடின் ஏனைய நான்கு கட்சிகளும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தம்மைப் பதிவு செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிக்கட்சியாகப் பதியவேண்டுமென்று கூட்டணிக் கட்சிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தும் அதற்கு தமிழரசுக் கட்சி உடன்படுவதாக தெரியவில்லை.

ஆனால், புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டக் கட்சியாக தமது கூட்டமைப்பு அமைய வேண்டுமென்ற மற்றக்கட்சிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்துள்ளன.

இதன் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தது.

குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தோடு, தாம் உடன்படவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது.

நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு எதிர்கொள்ளவே, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதிலிருந்து வெளியேறியது.

கூட்டமைப்பை பதிவுசெய்வதில் ஆரம்பித்த பிரச்சினை, அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை கூட்டுவதில் தொடங்கிய முரண்பாடு, ஜெனீவா விடயத்தில் ஆரம்பித்த குழப்பமான கருத்துக்கள், பிரச்சினைகள் கூட்டமைப்புக்குள் இன்றும் தொடர்கின்றன.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒழுக்க விதிகள், யாப்புகள் இல்லை என்பது ஒன்று, மற்றையது தலைமையின் சரியான வழிகாட்டல் அல்லது தலைமை யாரையும் கட்டுப்படுத்துவதில்லை என்ற காரணங்களும் முக்கியமானது.

இவ்வாறான சூழ்நிலையில் பல கட்சிகளின் கூட்டணியாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணியாகவே வலுவிழந்துள்ளது.

கூட்டணி அமைக்கப்பட்ட கடந்த 2001ஆம் ஆண்டு, முதல் தேர்தலில், 15 ஆசனங்களை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு இரண்டாவது தேர்தலுக்கு முன்னதாகவே முரண்பட்டுக் கொண்டது.

அந்த முரண்பாடுகள் இன்றும் தொடர்கின்றன. கடந்த பொதுத் தேர்தல் இதற்கு மிகப்பெரிய உதாரணமாக அமைந்தது.

வடக்கு கிழக்கில் ஒட்டுமொத்தமாக 10 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு பிரச்சினை ஏற்படுகின்ற போதெல்லாம் தோல்கொடுத்து காப்பாற்றி இறுதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வினையும் பெற்றுக் கொள்ளத் தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மிகச் சிறந்த பாடத்தை தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் புகட்டியிருந்தார்கள்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் இந்த தோல்விக்கு காரணம் எனலாம்.

அதனைவிட, 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம் தோல்வி கண்ட நிலையில் அதற்கு அடுத்து 1983இல் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு சம்பந்தனுக்கும், அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் காணப்படுகின்றது.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் பாரிய பொறுப்பு மற்றும் கடமை ஒன்று ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சம்பந்தன் பதவி வகிப்பதில் யாருக்கும் பிரச்சினை இல்லை அது தொடர்பாக யாரும் கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், போர் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற கேள்வியை விட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற கேள்வியே எஞ்சியுள்ளது.

சம்பந்தன் தலைவராக இல்லாத காலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுடைய எதிர்காலம் பற்றியும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து செயற்படக்கூடிய தலைமை யார் என்பது தொடர்பாகவும் உறுதியற்ற நிலை உருவாகியுள்ளது.

ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியே பிரிந்து சென்று சாதாரண கட்சி அரசியல் பண்புகளுடன் எதிர் விமர்சனங்களை செய்யப் போகின்றனரா?

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு என்று தனித்தனியான கட்சிகள் உருவாகப் போகின்றனவா? என்ன நடக்கப் போகின்றது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இரா. சம்பந்தன், யாரையும் கட்டுப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகவே முன்வைக்கப்படடு வருகின்றது. மேலும் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக நேரடியாகவே குற்றஞ்சாட்டியிருந்தார்.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் மற்றும் நேர ஒதுக்கீடு விடயத்தில் தமிரசுக் கட்சியின் ஆதிக்கம் காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனையவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு செல்வம் அடைக்கலநாதனை நியமிக்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதுத் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த சர்ச்சைகள் நீள்கின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொறாடா பதவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

மேலும், தேர்தல்களின்போது வேட்பாளர் தெரிவில் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் குறித்தும் பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வேட்பாளர் தெரிவு விடயத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவே அறியமுடிகின்றது.

இந்நிலையில், ”மாகாண சபைக்கு புதிய முகங்கள் அவசியம், இந்த முறை அதனை செய்ய வேண்டும்.” என்ற வகையில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறாடா உள்ளிட்ட புதிய பதவிகள் அனைத்தும் புதிய ஆண்டிலேயே நியமிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் ஆண்டின் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி கூட்டமைப்பின் நாடாமன்றக் குழுவைக் கூட்டி தீர்மானம் எடுப்பதாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

புதிய கொறடா, ஊடகப்பேச்சாளர் போன்ற பதவிகளை ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பின்பற்றலாம் என்ற யோசனையை மாவை சோ.சேனதிராஜா முன்வைத்துள்ளார்.

எனினும் கொறாடா பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் எவ்விதமான கருத்துக்களை கூட்டமைப்பின் தலைவர் வெளிப்படுத்ததாத நிலையில் அவ்விடயத்தினை நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பார்த்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கொறாடா பதவியிலிருந்து விலகிய சிறிதரனிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அப்பதவியில் தொடர்ந்தும் நீடியுங்கள் நாடாளுமன்றக் குழுவில் ஏனையவற்றை பார்த்துக்கொள்வோம் என்று கூறியபோதும் தனது தீர்மானத்தினை மாற்ற முடியாது என்று பதிலளித்துள்ளார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை செயற்படுத்தக்கூடிய அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான ஒரு தயார்ப்படுத்தல் சம்பந்தனிடம் அல்லது மூத்த உறுப்பினர்களிடம் இல்லாத ஒரு நிலை தோன்றியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்துச் செயற்படக்கூடிய ஒரு அரசியல் தலைமை அவசியம் என தமிழ்ச் சமூகம் எதிர்ப்பார்க்கின்றது. சம்பந்தனுக்கு பின்னரான அரசியல் சூழல் என ஒன்று உள்ளது. அதனை சம்பந்தன் கூட உணர்ந்து செயற்படுகிறாரா என்பதும் கேள்விதான்.

இதற்காகச் செய்ய வேண்டியது என்ன? தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்து அதனை ஒரு அரசியல் கட்சியாக அல்லாமல் ஒரு தேசிய இயக்கமாக செயற்படுத்த வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய பழமைவாத சிந்தனைகள் நீக்கம் செய்யப்படுதல் வேண்டும்.

பதிவுக்கு முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு யாப்பு உருவாக்கப்பட்டு அந்த யாப்பின் பிரகாரம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் செயற்படுதல் வேண்டும். உருவாக்கப்படும் யாப்பு சாதாரண கட்சி அரசியல் பண்பில் இருந்து விடுபட்டு வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து நேர்மையான அரசியல் தீர்வுக்காக செயற்பட வேண்டும்.

இல்லையேல் தமிழ் மக்களின் சுமார் 70 வருட போராட்டம் வீணடிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.