பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 29 பேருக்கு ட்ரம்ப் பொதுமன்னிப்பு!

பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இரு முன்னாள் உதவியாளர்கள், நெருங்கிய உறவினர் உள்ளிட்ட 29 பேருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ஏராளமான குற்றவாளிகளுக்கு ட்ரம்ப் இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பால் மானாஃபோர்ட்டுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரோஜர் ஸ்டோனுக்கும் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, வரி ஏய்ப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சார்லஸ் குஷ்னருக்கும் ட்ரம்ப் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். இவர் ட்ரம்ப் மகள் இவாங்காவின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முவரைத் தவிர, மேலும் 26 பேருக்கு ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, ரஷ்யத் தலையீடு விவகாரத்தில் சிறைத் தண்டனை பெற்ற ட்ரம்ப்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளைன், ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த இராணுவ வீரர்கள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பலருக்கு ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

மேலும், இன்னும் ஒரு மாதத்தில் தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட தனது முன்னாள் தலைமை திட்ட ஆலோசகர் ஸ்டீவ் பேனன், அந்தரங்க வழக்குரைஞர் ரூடி கியூலியானி உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.