தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட பொய் குற்றச்சாட்டு? 1,700 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்றுகாலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 1,829 பேர் வரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 1,700 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சுகாதார பிரிவினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களது ஆலோசனைக்கமைய அனைவரும் செயற்பட வேண்டும். தற்போது மேல்மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்காக பயன்படுத்தப்படும் பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
வைரஸ் பரவல் காரணமாக சில கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு சமூகமளிக்குமாறும் ,ஏனைய சுகாதார சட்டவிதிகளை பின்பற்றுமாறும் சுகாதார தரப்பினால் வழங்கப்படும் ஆலோசனைகளை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் அட்டலுகம பகுதியில் இவ்வாறு ஒத்துழைப்பு வழங்காத பலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார பிரிவினரின் செயற்பாடுகளின் போது, மக்களது விபரங்களை தங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் உண்மையான தகவல்களை மாத்திரமே அவர்களுக்கு வழங்கவேண்டும். இந்த செயற்பாடுகளின் போது போலித்தகவல்களை எவரேனும் வழங்குகின்றார்களா என்பது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் இந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.