நிபந்தனைகள் இன்றி அரசியல் கைதிகளை விடுவியுங்கள்- மணிவண்ணன்

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலப் பகுதியில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை, நிபந்தனைகள் இன்றி மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை சிறைகளில் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாக 78க்கும் அதிகமான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 15க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், கொரோனா சிகிசை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமுள்ளது.

இலங்கை சிறைசாலைகள் நெருக்கடி மிக்கவை. அத்துடன் சுகாதார வசதிகளும் அற்றவை. இந்நிலையில் தொடர்ந்து அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதனால், அவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் நிலையுள்ளது.

எனவே மனிதாபிமான அடிப்படையில் நிபந்தனைகள் இன்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.