அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அரசியல், ஆன்மீக தரப்புகளுடன் சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த தினங்களாக அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.

இதற்கமைவாக, நேற்றைய தினம் (சனிக்கிழமை) தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அத்தோடு நல்லூர் திருஞான சம்பந்தர் அதீன பிரதம குருக்கள் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளையும் சிவகுரு ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.கே.சிவஞானம் ஆகியோரை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களது தரப்பில் அருட்பணி ஜெபரணட்னம் அவர்களையும், நீதி சமாதானத்திற்கான ஆணைக்குழுவின் தலைவருமான அருட்பணி வணக்கத்திற்குரிய மங்களராஜா அவரகளையும், அருட்பணி வணக்கத்திற்குரிய இ.ம.வி.ரவிச்சந்திரன் அவர்களையும் சந்தித்து விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, யாழ். நாகவிகாரை பீடாதிபதி வணக்கத்திற்குரிய விமல தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறு கோரி நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களை நேரில் சந்திக்க முயற்சித்த போது அவர் பணத்தில் இருந்த காரணத்தினால் தொலைபேசி ஊடாக குறித்த விடயங்கள் தெரியப்படுத்தப் பட்டுள்ளதாகவும், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒன்றிணைந்த வகையில் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு பரிபூரண ஆதரவை தருவதாக கூறியிருந்ததாகவும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஏனைய தரப்புகளை தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.