இப்போது ஈழத் தமிழ் மக்களுக்கு உடனடியாக அவசியப்படுவது தீய சக்திகளை களையெடுப்பதும், தமிழ் மக்களை உயர்ந்த பட்சம் ஐக்கியபடுவதும்தான். அனைத்து வகையிலுமான ஐக்கியமே தமிழ் மக்களுக்கான தேசிய அடித்தளமாகும் என கட்டுரையாளர் தி. திபாகரன் M. A. அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்…
இன்று ஈழத் தமிழர் அரசியலானது உள்நாடு, அண்டைநாடு, இந்து மாகடல் பிராந்தியம், புவிசார்நிலை, உலகந்தழுவிய பூகோள அரசியல் என்னும் ஐந்தும் மிகவும் கடினமான கொதிநிலை கொண்ட பெரும் போட்டிக்குள் அகப்பட்டுள்ளது.
ஆனால் எந்தொரு தமிழ் அரசியல் தலைமைகளிடமோ, கட்சிகளிடமோ எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டகளும் கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் என்று கூறி ஐந்து வருடங்கள் இழுத்தடித்து எதனையும் சாதிக்காமல், முற்றிலும் தோல்வியடைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் “தீர்வு இல்லையேல் போர் வெடிக்கும்” என்றும் ‘‘போர் இன்னும் ஓயவில்லை” என்றும் ‘‘கொழும்பு எம்மை ஏமாற்ற முயன்றால் அரசை முடக்கும் போராட்டம் வெடிக்கு” என்றும் ‘‘புலிகளின் பலம் பொருந்திய சக்தி தமிழ் கூட்டமைப்பு”என்றும் வாய்ச்சவடால் விட்டார்கள்.
இவ்வாறு பல மேடைகளிலே” “போர் வெடிக்கும் ” போர் வெடிக்கும்” என்று ஏமாற்றுகரமான இந்தப் பொய்யான, கற்பனையான கோசங்களை மேடைகளில் மட்டும் முழங்கிடத்தான் முடியுமே தவிர இவர்களால் வேறு எதனையும் சாதித்திட முடியாது.
ஆயுதப் போராட்டம் ஈழத் தமிழினத்தை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. எங்கு நாம் நிறுத்தப்பட்டோமோ அங்கிருந்துதான் அடுத்தகட்ட போராட்டப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும்.
ஆயுதப் போராட்டம் எதனை எம்மிடம் இறுதியாகத் தந்திருக்கிறதோ அதனை வைத்துக் கொண்டுதான் நாம் அடுத்தகட்ட வரலாற்றுப் பயணத்தை தொடர முடியும.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக எழுந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் என வகைப்படுத்தி நீதிவிசாரணை எழுகின்ற சூழ்நிலையில் தமிழர்கள் நீதிபெறப் போகிறார்கள் என்ற நிலை ஒன்று அன்று இருந்தது.
அந்தவேளை எல்லாம் முடிந்துவிட்டது. பேரினவாதம் நீதியின் முன் நிறுத்தப்பட்டு அம்பலப்படப் போகிறது என யாவரும் எதிர்பார்த்திருக்க, சிங்களப் பேரினவாத இராஜதந்திரம் இவற்றை எல்லாம் தலைகீழாக மாற்றி நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து தமிழர்களின் வாக்குகளினால் பதவிக்கு வந்து, தமிழ் தலைவர்களைப் பயன்படுத்தி சர்வதேசக்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கையையும், இலங்கை இராணுவத்தையும் அதற்குப் பொறுப்பான ராஜபக்சக்களையும் காப்பாற்றினார்கள்.
இப்போது மீண்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் இலங்கை அரசுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்க கூடிய வகையிலான புதிய அறிக்கையொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த சுமந்திரன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை நோக்கி அறிக்கை ஒன்றை வழங்கி இருக்கிறார்.
கட்சியின் ஏனையவர்களுடன் கலந்தாலோசிக்காமல், தமிழ் கூட்டமைப்பின் ஏனைய கூட்டுக் கட்சிகளுடன் அவிப்பிராயங்கள் எதனையும் கேட்காமல் தான் நினைத்த வாக்கில் சர்வதிகாரத்தனமாகச் திரு. சுமந்திரன் செயல்படுவதைக் காணமுடிகிறது.
இது அவருக்கு பின்னே சிங்கள அரசின் அனுசரணையும் பாதுகாப்பும் உள்ளதை வெளிப்படுத்துகிறது.
இத்தகையவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இத்தகைய புல்லுருவிகளை கட்சியில் இருந்த களைந்து தமிழரசுக் கட்சி முதலில் தன்னைப் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும்.
அன்று சுமந்திரன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ‘போர்க்குற்ற விசாரணை முடிவடைந்துவிட்டது” என்றார்.
இவ்வாறு இனப்படுகொலைக் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக அன்று நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பச்சையாக பொய் கூறிய சுமந்திரன் அதன்பின் இன்று போர்க் குற்றத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்று பொய்யாக்கால் குதிரை ஆட்டம் ஆடுகிறார்.
அவரது இத்தகைய பொய்யான வாய் வீச்சுக்கு பயப்படும் ஒரு கூட்டமும் அதேவேளை அதைக்காவிக்கொண்டு” ஆகா ஓகோ” எனப்புழுகும் ஒட்டுண்ணிக் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.
பேரினவாதத்தின் அனுசரணையுடனான எதேச்சாதிகாப் போக்கில் மேடைகளிலேறி வட்டத்தைக் கீறிச் சதுரமென்றும்இ சதுரத்தைக் கீறி வட்டமென்றும் உரத்து உளறவல்ல வக்கீல் அரசியற்கோமாளிகளை வரலாறு அவ்வப்போது பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியிருக்கிறது.
இந்தப் புளுகு மூட்டைக் கோமாளிகள் தம் சுயநலத்தின் நிமித்தம் தற்காலிக சுகங்களை அனுபவித்தாலும் வரலாற்று அன்னையின் முன் அழிவுக்கென்றே தோன்றிய இழிபிறவிகள் என்ற நிலையைத்தான் இறுதியில் பெறுவர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் திரு சுமந்திரன் பொதுத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மகிந்த ராஜபக்சாவை தான் ஒருவர் மட்டும் தனியே சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையும், அதன்பின்னர் அவர் ஊடகங்களுக்கு அளித்த செவ்விகளும் ராஜபக்சக்களுடன் இணைந்து தமிழ்மக்களுடைய பிரச்சனைக்கான தீர்வைப் பற்றிப் பேசப் போவதாகவும் அறிவித்ததிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலில் ஏற்படப்போகும் விபரீத மாற்றங்களை ஊகிக்க முடியும்.
எனவே தமிழ் மக்களின் அரசியலில் ஏற்பட்டிருக்கும் அரசியற் புற்றுநோய்க் கட்டியை தமிழரசுக் கட்சியானது கட்சி ஏற்பாடு வகைகளின் மூலம் உரியவாறு அகற்றாமல் அவரை களை எடுக்காமல் தமிழ் மக்களுக்கு விமோசனம் ஏற்பட முடியாது.
புதிய அரசியலமைப்பு வரும் அவ்வாறு வராவிட்டால் பதவி பதவி விலகுவேன் என நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் அடித்துக் கூறினார். அவர் பல தடவை இவ்வாறு பதவி விலகுவேன் என கூறியுள்ளார்.
இவரைப் போலவே தமிழ் அரசியல் வாதிகள் பலரும் கூறியிருந்தாலும் இன்றுவரை எந்த தமிழ் அரசியல்வாதியும் பதவி விலகிய மானத் தமிழர்கள் யாரையும் வரலாற்றில் காணமுடியவில்லை.
அன்றொருநாள் போர்க்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேசுவதற்கு முன்னாள் போராளிகள் திரு. சம்பந்தனைப் பார்க்கச் சென்றபோது அவர் நடந்து கொண்ட அநாகரிகத்தை எப்படிச் சொல்வதெனௌறே தெரியவில்லை.
புலிகளின் காலத்தில் நீங்கள் கிளி சமாதானச் செயலகம் செல்லும் போதெல்லாம் அங்கு நிகழ்ந்தவற்றை சற்று எண்ணிப்பாருங்கள். நீங்கள் மனிதனாக வாழ்கிறீர்களா என சுயபரிசீலனை செய்யுங்கள்.
காணாமற்போன பிள்ளையின் தாய் சிங்களத் தலைவனின் காலில் விழுந்து கதறியபோது நீங்கள் யாவரும் கல்மனதுடன் வடித்து வைத்த கற்சிலை போல கல்ல குந்தியிருந்தீர்கள்.
அந்தத் தாயை. தூக்கி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறியிருந்தால் உங்களை மனிதராகக்கூடக் கணித்திருக்கலாம். நீங்கள் அந்த நிலையை இழந்து வெகு காலமாகிவிட்டது.
“தமிழ்த் தலைவர்களை ஒரு கோப்பை தேனீருக்கு வாங்கலாம்” என 1953-1956 வரை பிரதமராகவிருந்த சேர் . ஜோன் கொத்தலாவல கூறியது தமிழ்த் தலைவர்கள் உடனான அவரது அனுபவத்தின் வாயிலாகவேயாகும் என்பதைப் பார்க்கும் போது அதன் நீட்சி நல்லாட்சி அரசாங்கம் வரை கண்முன் விரிகிறது.
ஒரு நூற்றாண்டுகால இலங்கை அரசியல் போக்கும்இ இந்து மாசமுத்திர பிராந்திய அரசியல் பொருளியல் போக்கும் இணைந்து உலகளாவிய அரசியலொழுங்கில் ,தமிழர் தாயகம் தவிர்க்க முடியாத ஒரு கேந்திரப் புள்ளியாய் அமைந்து கிடக்கையில் இதன் காத்திரமான பெறுமதியை உணர்ந்திராத தமிழ்த் தலைமைகள் தம்மனம் போன போக்கில் செயற்பட்டு தன்னின உண்ணிகளாக காணப்படுகின்றனர்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டது என்று கூறிய சுமந்திரன் தற்போது போர்க்குற்ற விசாரணை என்ற ஒரு காவடி எடுத்துக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை நோக்கி பயணிப்பதை பார்க்கும்போது இதற்க்குப் பின்னால் இருக்கும் சதியைப் பபற்றித் தெளிவாக புரியக்கூடியதாக உள்ளது.
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தனியே ராஜபக்சவை சந்தித்த சுமந்திரன் அவருடன் ஆலோசனை நடாத்தி இரகசிய ஒப்பந்தம் ஒன்றை அவர் செய்திருக்க முடியும் என தெரிகிறது.
அதன்படி சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் கால அவகாசம் என்ற பெயரில் காலத்தை இழுத்து அடிப்பதற்கான திட்டத்தை சுமந்திரன் மூலம் நிறைவேற்ற ராஜபக்சவுடன் இணைந்து சுந்திரன் தீட்டி இருக்க வேண்டும்.
இந்நிலையில் போர்க்குற்ற விசாரணைக்கான புதிய அறிக்கை ஒன்றை தயாரிப்பதாக காட்டி அந்த அறிக்கை திருவாளர்கள் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றோரிரடம் ஒருபுறம் கையளித்துவிட்டு மறுபுறம் அவர்களது முடிவுகளது சம்மதம் எதனையுமே பெற்றுக்கொள்ளாமல்
அந்த அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தை நோக்கி நகர்த்தியுள்ளார்.
தமிழ் கட்சிகளின் ஏகோபித்த முடிவாக இந்த அறிக்கையை தாம் தயாரித்துள்ளதாக ஒரு சோடனையை ஐ. நா .மனித உரிமைகள் ஆணையத்திடம் காட்டி இனப்படுகொலை புரிந்த ராஜாக்களை பாதுகாப்பதற்கான கால நீட்டிப்பை பெறுவதற்கான ஒரு முயற்சியில் சுமந்திரன் கனகச்சிதமாக ஈடுபட்டுள்ளார் .
இத்தகைய தீய சக்திகளை தமிழரசு கட்சியில் இருந்து உடனடியாக அகற்றியாக வேண்டும். இதனை உரிய வகையில் தமிழரசுக் கட்சியினர் உடனடியாக அவரை கட்சியைவிட்டு அகற்ற வேண்டும்.
இந்த வகையில் தமிழரசுக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழரசுக் கட்சியைத் தூய்மைப்படுத்த முன்னின்று ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
இப்போது உடனடியாக இதைச் செய்யத் தவறினால் தந்தை செல்வா கூறியது போல “தமிழ் மக்களை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்ற பரிதாப நிலை உண்மையாய்ப் போய்விடும்.