இலங்கை தீவின் வடக்கு ,கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், மக்கள் பலவிதப்பட்ட பருவ காலங்களை எதிர்கொள்கின்றனர்.
வெய்யில், மழை, குளிர் ஆகியவற்றுக்கு அப்பால் கள்ளு, மாம்பழம், பலாப்பழம், பனம்பழம், முருங்கைக்காய் போன்றவை குறிப்பிட்ட காலங்களிலேயே கிடைகிறது. இவ் அடிப்படையில் ஒழுக்கமான, நிதானமான தந்திரம் கொண்ட தலைவர் ஒருவர் இல்லாத கால கட்டத்தில், விடயம் விளங்கியவர்களும், விடயம் விளங்காதவர்களும் ஜெனிவா பற்றி புலம்புவது வழமையாகியுள்ளது.
சகல ஊடகங்களும் – பத்திரிகை, தொலைகாட்சி, வானொலி, இணையதளம் யாவும் இரவுபகலாக ஜெனிவா படலமே வாசிக்கின்றனர். இக்காலகட்டத்தில் மனித உரிமை தெரிந்தவரும்,தெரியாதவர்களும், அரசியல் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும், சட்டம் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் வேற்று மொழி விசேடமாக ஆங்கிலம் தெரியாதவர்களும் எதிர்வரும் ஜெனிவா பற்றி கொக்கரிப்பதற்கான முக்கிய காரணி என்னவெனில், இந்த அருமையான சந்தர்ப்பத்தில் அப்பாவிகளிடமிருந்து நல்ல நிதி சேகரிக்கலாம் என்பதுடன், சிலர் இன அழிப்பு போர்க்குற்றம் புரிந்த பௌத்த சிங்களஅரசை மறைமுகமாக காப்பாற்ற முனைவதை காணக்கூடியாதகவுள்ளது.
ஜெனிவா, மனித உரிமை பற்றி கதைப்பதற்கும், கண்டனங்கள் தெரிவிக்கவும் நான் யார் என்பதை இங்கு கூறியே ஆக வேண்டும். இல்லையேல் விசமிகள் பல கற்பனை கதைகள் கூறுவார்கள்.தமிழீழ போராட்டத்தில், காலம் சென்ற இரு முக்கிய பேர்வழிகளின் (பிரித்தானியா,பிரான்ஸ்) முன்னெடுப்புடனும் ,ஆலோசனைகளுடனும் தமிழர் மனித உரிமைகள் மையத்தை (T.C.H.R.)ஐ 1990ம் ஆண்டு நாம் பிரான்சில் ஆரம்பித்தோம்.
இதனை தொடர்ந்து, கடந்த முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக, ஐ,நா மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டு வருபவன் மட்டுமல்லாது, அன்று முதல் எனது தொழில் சார் கணனிதுறையிலிருந்து விலகி, மனித உரிமையை பற்றிய விடயங்களை, துறைசார் கல்வியாக,பிரித்தானியவில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், சர்வதேச மனிதர் உரிமை நிறுவனம் போன்ற உலக அங்கீகாரம் பெற்ற பல பல்கலைகழகங்களிலும் நிறுவனங்களிலும் கல்வி கற்று,மனித உரிமை சேவை செயற்பாட்டிற்கான அறிவு தகமை அனுபவங்களை பெற்றுள்ளேன் என்பதை இங்கு பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
இதேவேளை, கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை பற்றிய துறைசார் கல்வியை கற்றுள்ளதோடு, உலகில் சில முக்கிய பிரமுகர்களுடனான தொடர்புகளையும் பேணி வருகிறேன்.எனது மனித உரிமை கல்வியை, சிறீலங்காவில் சட்டம் ஒழுங்கை கண்கணிக்கும் – சட்டமா அதிபர் திணைக்களம், காவல் துறையின் முக்கிய பணியாளர்களுடன் மட்டுமல்லாது,சிறீலங்காவின் தலை சிறந்த கல்விமான்களுடனும் கற்று கொண்டேன் என்பதையும் கூற விரும்புகிறேன்.
ஆகையால் ஜெனிவா, மனித உரிமை பற்றி கதைப்பதற்கும், கண்டிப்பதற்கும் எனக்கு அதற்கு ஏற்ற கல்வியும், தகமைகளும் உள்ள அடிப்படையில், ஜெனிவா பற்றிய யதார்த்தங்களை இங்கு தமிழீழ மக்களுடன் பகிர விரும்புகிறேன்.எனது கட்டுரைகளை பொதுவாக தமிழ் ,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடுவது தான் வழமை. ஆனால் இக்கட்டுரை நிச்சயம் ஆங்கிலத்தில் எழுதும் எண்ணமில்லை. அப்படியாக செய்யும் கட்டத்தில், இவ்வளவு தூரம் அறிவற்ற தமிழ் அரசியல்வாதிகளும்,செயற்பாட்டாளர்களும் உள்ளார்களா என மற்றைய இனத்தவர்களால் எண்ண தோன்றும்.
அது எமது பல்லைக்குத்தி மற்றைய இனங்களுக்கு மணப்பதற்கு கொடுப்பதற்கு சமனாகும்.பெரும்பாலனவை புசத்தல்கள் நிற்க, என்னை பொறுத்தவரையில், இன்று வரை ஜெனிவா பற்றி வெளியான கட்டுரைகள் ஆய்வுகள் அலசல்கள், மனுக்கள் பெரும்பாலனவை புசத்தல்கள்.
அரசியல் வாதிகள் தமது வாக்கு வங்கிக்காகவும், செயற்பாட்டாளர்களும், செயற்பாட்டாளர் எனப்படுவோரும் நிதி வசூலிப்பதற்காகவும், தாமும் ஜெனிவாவில் ஏதோ வெட்டி விழுத்துவதாக அப்பாவி ஈழத்தமிழர்களுக்கு காட்சியளிப்பதற்காக செய்யப்படுபவை.
எனது கட்டுரைகளில் தொடர்ந்து எமுதிவரும் முக்கிய விடயம் என்னவெனில், மனித உரிமை,போர்க்குற்றம். இன அழிப்பு போன்ற விடயங்களை ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை சபை மூலமே மற்றைய கட்டங்களிற்கு நகர்த்த முடியும். அதாவது ஐ.நா ஜெனிவா மனித உரிமை செயற்பாட்டிற்கான தளம். ஜெனிவாவில், அரசியல் தீர்விற்கான சுயநிர்ணய உரிமை என்ற விடயம், ஐ.நா மனித உரிமை சபை நிகழ்ச்சி நிரலில் அறவே கிடையாது.
இதைபுரிந்து கொள்ளதா அரசியல்வாதி ஒருவர், ஜெனிவாவிற்கு தவறாது வருகை தந்து,சுயநிர்ணய உரிமை பற்றி புசத்திவிட்டு போவது வழமை. இப்பொழுது ஐ.நா.மனித உரிமை சபையால் ஒரு பிரயோசனமுமில்லையென புசத்த தொடங்கியுள்ளார்.
ஐ.நா வின் கட்டமைபை பொறுத்த வரையில், நியூயோர்கில் உள்ள பொதுச்சபை, பாதுகாப்பு சபையிலேயே தமிழீழ மக்களது அரசியல் தீர்வுக்கான சுயநிர்ணயம் பற்றி உரையாடவும் வேலை செய்யவும் முடியும். அதாவது ஐ.நா நியூயோர்க் என்பது ஓர் அரசியல் வேலைக்கான தளம். ஆனால், காலம் சென்ற வழக்கறிஞர் திரு வைகுந்தவாசனை தவிர்ந்த வேறு எந்த ஈழத்தமிழரும், இன்று வரை அங்கு ஈழத்தமிழர் சார்பாக வேலை செய்தது கிடையாது என்பதே உண்மை.
றோம் சாசனம் எனப்படும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (International CriminalCourt – ICC) சாசனத்தில், சிறீலங்கா கையெழுத்திடாத காரணத்தினால், சிறீலங்காவின் விடயத்தை ஐ.நா.ம.உ.சபை மூலமே ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு நகர்த்த முடியும். வேறு விடயங்கள் வழிகள் யாவும் வீண் புசத்தல்கள்.மினமாரில் உள்ள ரோகினிய மக்களின் இன அழிப்பு விடயத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு(International Court of Justice – ICJ) கொண்டு சென்றது போல், தமிழீழ விவகாரங்களும் அங்கு கொண்டு செல்வதற்கு, 193 ஐ.நா அங்கத்துவ நாடுகளில், ஆக குறைந்தது ஒரு நாடு முன்வந்தால் மட்டுமே, இதை செய்ய முடியும்.
ஐ.நா. மனித உரிமை சபையால் பிரயோசனம் இல்லை என கூறும் அரசியல்வாதிகள், இதை செய்ய முன்வருவார்களா?புசத்துவதை தவிர்த்து, குறைந்தது ஒரு நாட்டின் உதவியை இவர்களால் பெற முடியுமா?இவர்கள் தேர்தல் மேடைகளில் புசத்துவது போல், ஐ.நா.விடயங்களில் புசத்துவது மிக வெட்க கேடான விடயம்.
வேடிக்கை என்னவெனில், சிறீலங்கா அரசு இன அழிப்பு போர்க்குற்றம் புரிந்துள்ளதை உலகமே அறிந்துள்ள இக்கால கட்டத்தில், சைக்கிள் ஓட்டம், பாதயாத்திரை போன்ற மக்களை ஏமாற்றும் பேய் காட்டும் வேலைத் திட்டங்களை மேற்கொண்டு பணம் படைத்தவர்களிடம் பெரும் தொகை பணத்தை சிலர் வசூலிக்கின்றனர்.
சைக்கிள் ஓட்டம், பாதயாத்திரை யாவும் 2009 மே மாதத்தின் பின்னர் உருவான பேய்காட்டு வேலைதிட்டங்களில் சில! இதில் பங்குகொண்ட, கொண்டு வரும் தோழர்களை பாராட்டுகிறோம்.ஆனால் இதன் ஒழுங்கமைப்பாளர்கள், தமக்கு மொழி ஆளுமையோ, மனித உரிமை பற்றியோ எந்த பகுத்தறிவும் அற்ற காரணத்தினால், சிறுபிள்ளைத்தனமாக தமிழீழ மக்களுக்கு நடைபெற்ற இன அழிப்பையும், போர் குற்றங்களையும் சைக்கிள் ஓட்டம், பாதயாத்திரையால் இழிவுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை.
சிங்கள புத்திஜீவிகளும், செயற்பாட்டாளர்களும் அமெரிக்கா, பிரெஞ்சு ஜனாதிபதிகளையும், பிரித்தானியா, கனடா பிரதமர்களை நேரில் சந்தித்து, பௌத்த சிங்கள அரசை நியாயப்பத்தும் இக்காலகட்டத்தில், சைக்கிள் ஓட்டம், பாதயாத்திரை ஈழதமிழருக்கு இதுவரையில் என்னத்தை தந்துள்ளது? இனி எதை பெற்று தரும்?46 வது கூட்டத்தொடர் ஐ.நா. மனித உரிமைசபையின் 46 வது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
ஆனால், சென்ற 43, 44, 45ஆவது கூட்டத்தொடர்கள் போல், கொவிட் 19இன் தாக்கத்தினால், இக்கூட்டத்தொடர் ஒழுங்காக நடைபெறுமா என்பது இவ்போதைய கேள்வி.2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐ.நா. மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்,ஆசியா பசுபிக் நாடுகள்(13) : சீனா (2023) யூபிக்ஸ் தான் (2023) நேபலாம், (2023) பாகிஸ்தான், (2023) பாரேன், (2021) பாங்களாதேஸ், (2021) பிஜீ(2021) ,இந்தியா (2021) ,பிலிப்பைன்ஸ் (2021) இந்தோனேசியா (2022) ,ஜப்பான் (2022),மாசல் தீவுகள் ,(2022) கொரிய குடியரசு – தென் கொரிய (2022).ஆபிரிக்கா நாடுகள் (13) : மலாவி (2023) ,கொட்துவார் – ஐவிரி கோஸற்,(2023) கபோன், (2023) செனகல் ,(2023) புக்கினோபாசோ (2021) கமரோன், (2021)ஏரித்தீரியா, (2021) சோமலீயா ,(2021) ரோகோ ,(2021) லிபியா ,(2022) மொறிற்ரானியா,(2022) நாபிபீயா, (2022) சுடான், (2022).லத்தின் அல்லது தென் அமெரிக்க,கரிபியா நாடுகள்(8),பொலீவியா(2023) ,கியூபா (2023) மெக்சிக்கோ, (2023) ஆஜன்ரீனா ,(2021) பாமாஸ், (2021) உருகுவேள், (2021) பிறேசில், (2022) வெனிசுலா, (2022).மேற்கு ஐரோப்பிய,மற்றைய நாடுகளாவன- (7) :பிரான்சும் (2023),பிரித்தானியாவும் (2023) ,ஆவுஸ்தீரியா (2021, டென்மார்க் (2021) ,இத்தாலி (2021),ஜெர்மனி (2022), நெதர்லாந்து (2022),கிழக்கு ஐரோப்பிய நாடுகள் (6) : ராசியா (2022), யூக்கிறேன் 2023),புல்கேரியா (2021) ,செக் குடியரசு (2021) ,ஆர்மேனியா (2022), போலாந்து (2022),.ஐ.நா. மனித உரிமை சபையில் மேலே கூறப்பட்ட 47 நாடுளே ஈழத்தமிழர்களாகிய எமது தலை விதியை முடிவு செய்வார்கள்.
இதில் ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரித்தானியா,கனடா போன்ற நாடுகள் ஓர் கடுமையான தீர்மானத்தை சிறீலங்கா மீது கொண்டுவரவுள்ளனர் என்பதும் செய்தி. ஆனால் இறுதியில் எப்படியாக எதை நிறைவேற்றுவார்கள் என்பதை இப்பொழுது யாரும் கூற முடியாது.
சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையை கொண்டுவரவுள்ள நாடுகளை பொறுத்தவரையில், ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு சிறீலங்காவை சிபார்வு செய்வது, சர்வதேச விசாரணை,சிறீலங்காவின் நிலமைகளை அவதானிப்பதற்கு ஐ.நா.வின் விசேட பிரதிநிதி போன்று பல விடயங்கள் மனதில் கொண்டுள்ளனர்.
இதேவேளை, சிறீலங்கா இத்தீர்மானத்திலிருந்து விலகிச் சென்றாலும், அவர்களது நட்பு நாடுகளான சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள், சிறீலங்காவிற்கு மேலும் கால அவகாசத்தை கொடுத்து, ஐ.நா, மனித உரிமை சபையில் காலத்தை கடத்த திட்டமிட்டுவருவதாக இன்னுமொரு செய்தியும் பரவலாக உலாவுகிறது.
இதற்கு ஒரு தமிழ் அரசியல்வாதியும், பிரித்தானியாவில் உள்ள சில செயற்பாட்டாளர்களும் துணைபோவதாக புலம்பெயர் வாழ் தமிழர்களிடையே பரவலாக பேசப்படுகின்றது.
இதன் உண்மைகளை வெளிப்படையாக காண முடியாவிடிலும், “எந்த புத்துக்குள் எந்த பாம்பு உள்ளது”என்பது யாருக்கும் தெரியாது.இங்கு ஒரு விடயத்தை வெளிப்படையாக கூற விரும்புகிறேன். தமிழர் மனித உரிமைகள் மையத்தினராகிய நாம், 1990ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட தொடங்கிய காலம் முதல், இன்றுவரை, சர்வதேச அமைப்புக்களின் துணையுடன் இணைந்து வேலை செய்து வருகிறோம்.
சில தமிழ் அரசியல் வாதிகள், செயற்பாட்டாளர் சிலரும் தாம் தான் ஐ. நா. ம. உ சபையில் யாவற்றையும் நகர்த்துவது போல் தம்பட்டம் அடித்தாலும், உண்மையில் சர்வதேச மனித உரிமை சபை – Amnesty International, மனித உரிமை கண்காணிப்பகம் – Human Rights Watch, சர்வதேச நீதிபதிகள் ஆணையம் -InternationalCommission of Jurists – ICJ போன்ற அமைப்புக்களின் முன்னெடுப்பினலேயே தமிழீழ மக்களின் விடயங்கள், அன்றிலிருந்து இன்றுவரை ஐ.நா.ம.உ சபையிலும் மற்றைய பிரிவுகள் நிறுவனங்களில் நகர்த்தப்படுகிறது என்பதே உண்மை.
காரணம், சர்வதேச சமூகத்தின் பார்வையில், எந்த நாடாகிலும் இவ் அமைப்புகள், நடு நிலையான வேலைதிட்டம் நிலைபாடுகளை கொண்டுள்ளதென கருதுகின்றனர்.வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற வேளை, தமிழர் மனிதர் உரிமைகள் மையத்திற்கு சகல வசதிகளும் இருந்த காரணத்தினால் தமிழ் புத்தி ஜீவிகள், கல்விமான்கன்,சட்டவல்லுனர்களை எம்முடன் அழைத்து வந்து ஐ.நா. ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய பாராளுமன்றம் போன்ற இடங்களில் வேலை செய்தோம்.
2009 ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் எமது செயற்திட்டங்கள் மாற்றம் பெற்றிருந்தாலும் ராஜதந்திரிகள், ஐ.நா.பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் தோழமை அமைப்புக்களுடன் தொடர்ந்து முடிந்தவரை செயற்திட்டங்களை முன்னெடுக்கிறோம். சுருக்கமாக கூறுவதனால், ஒருவர் இருவராக இருந்தாலும், பலரை உட்படுத்திய பேய்க்காட்டு அணிகளுக்கு மேலாக வேலைசெய்கிறோம்.
ஐ.நா.வின் பிரதிநிதிகள், ராஜதந்திரிகள், சர்வதேச அமைப்புக்கள்,தோழமை அமைப்புகள் பரவலாக யாரை ஐ.நா.வில் விரும்புகிறார்கள், யாரை நம்புகிறார்கள் என்பதை, ஐ.நா.ம.உ.பைக்கு நேரில் வருபவர்கள் புரிந்துகொள்வார்கள்.இறுதியாக எம்மால் முன்வைக்கப்படும் வேண்டுகோள் என்னவெனில் – ஈழத்தமிழர் மட்டுமல்லாது பொதுவாக தமிழர் எந்த நாட்டில் எங்கு வசித்தாலும், எதிர்வரும் 46வது ஐ.நா.ம.உரிமை சபையில் சிறிலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்கு நீங்கள் ஆதரவு வழங்க விரும்பினால், நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள, மேலே கூறப்பட்ட அங்கத்துவ நாடுகளின் தூதுவராலயத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி, உங்கள் சந்திப்புக்களையும் மனுக்களை அவர்களிடம் கொடுங்கள்.
அடுத்து, உலகில் எங்கெங்கு இந்தியா தூதுவராலயங்கள் உள்ளனவோ, அவற்றுக்கு முன்னால் ஊர்வலங்கள் விழிப்பு போராட்டங்களை நடாத்தி, ஈழத்தமிழரது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டியது இந்தியாவின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்துங்கள்.
இவ்வழிகள் மூலமே ஈழத்தமிழர் இலங்கை தீவில் சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ வகிக்கும்.இவை தவிர்ந்த வேலை திட்டங்கள் செயற்பாடுகள் யாவும், பௌத்த சிங்கள அரசினது செயற்பாடுகளிற்கு உறுதுணையாகும் என்பதே உண்மை.
இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள மனித உரிமை, ஐ.நா. சம்பந்தமான கருத்துக்களை,தகமை உள்ளவர்கள் யாரும் மறுதலித்தால், தமிழீழ மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகம் (வானொலி, தொலைக்காட்சிகளில்) என்றும் விவாதிக்க நான் தயாராக உள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு 28 Dec 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் NATIONAL TAMIL செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை