கைவிலங்கினால் கழுத்தை நெரித்தார் அதுதான் சுட்டோம் – பொலிஸார் விளக்கம்

வேயங்கொடை – ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் காவற்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சந்தேகநபரது நீதவான் பரிசோதனை இன்று பிற்பகல் இடம்பெற்றது.

அத்தனகல நீதவான் தலைமையில் இந்த பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

அவரது சடலம் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிணவைறையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது சடலத்துக்கான மரணப்பரிசோதனை நாளையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நிஷாந்த குமாரசிறி என்ற குறித்த நபர், போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை காவற்துறையினருக்கு வழங்கிய ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஏலவே கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக இன்று அதிகாலை வேயங்கொடை – ஹல்கம்பிட்டிய பிரதேசத்துக்கு அழைத்துச் சென்ற போது, கைவிலங்கினால் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதன்போது பொலிஸார் அவரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது காயமடைந்த காவற்துறை அதிகாரி தற்போது கம்ஹா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.