இரண்டாம் சுற்று பி.சி.ஆர். சோதனையில் ஒருவருக்குக் கொரோனா! மருதனார்மடம் கொத்தணி 110 ஆக உயர்வு

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று 426 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் இணுவில் பகுதியைச் சேர்ந்த குறித்த தொற்றாளர் மருதனார்மடம் பொதுச்சந்தையிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முதல் சுற்றுப் பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று இல்லை எனவும், இரண்டாம் சுற்றுப் பரிசோதனையிலேயே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதன்படி மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பரிசோதனைக் கூடத்தில் இன்று நல்லூர், சாவகச்சேரி, சங்கானை பிரதேசங்களைச் சேர்ந்த 240 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.