ஈழத் தமிழ் அரசியலில் பத்தாண்டு கால இறுதிக் கணக்கெடுப்பு

நடந்து வந்த பாதையை தெரிந்து கொள்ளாமல் நடக்க வேண்டிய பாதையை வகுக்க முடியாது. இவ் வாரத்தோடு முடிவடையும், 2010ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு முடியும் வரையான இந்தப் பத்தாண்டு கால அரசியலைப் பற்றி மிகுந்த நேர்மையுட னும் இதயசுத்தியுடனும் சரியான அரசியல் கணக்கெடுப்பை தமிழ் மக்கள் செய்து பார்க்க வேண்டும் என தொல்லியற்துறை மாணவன் திபாகரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாயிலாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஓர் இராணுவ தோல்வியென்றால் அதன்பின்னான இப் பத்தாண்டு கால அரசியலானது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அரசியற் தோல்வியாக அமைந்து உள்ளது.

இனப்படுகொலை மூலமான இராணுவ வெற்றியின் மமதையில் மகிந்த ராஜபக்ச ஓர் ஆண்டு முன்னதாகவே 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார்.

தேர்தலின் போது தமிழ் மக்கள் தமக்கென ஒரு ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்தி இனவாதத்துக்கு எதிரான தமிழ் தேசியத்துக்கான தமது வாக்குகளை ஒன்று திரட்டி அளிக்க வேண்டும் என்ற கருத்து அரசியல் அறிவியல் ரீதியாக முற்றிலும் புத்தி பூர்வமாக முன்வைக்கப்பட்டது.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்போ அன்றி அன்றைய தமிழ் தலைவர்கள் யாருமோ அதனை ஏற்றுக் கொள்ளாமல் இனப்படுகொலை புரிந்த இராணுவத் தலைமைத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து வாக்களித்தனர்.

தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பத்தேர்வு வாழ்க்கை தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு அளித்து தமிழ் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்திய பின்பு இரண்டாவது வாழ்க்கை ஒப்பந்த அடிப்படையில் அளிக்கலாம் என்ற கருத்து அப்போதைய தேர்தல் காலத்தில் தெளிவாக முன் வைக்கப்பட்டது. ஆனால் இத்தகைய புத்தி பூர்வமான கருத்துக்கள் தமிழ் அரசியல் பக்கத்திலிருந்து ஆதரவு கிடைக்கவில்லை.

இவ்விவகாரத்தில் தமிழ் தலைவர்கள் அனைவரும் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டதால் அதன் பின்னணியில் தமிழ் தேசிய ஐக்கியம் தேர்தல் களத்தில் சீர்குலைந்து போனது. அதன் அறுவடையாக 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது தமிழ் தேசியம் நொருங்கித் துண்டுபட்டு எதிரிக்கு வாக்குக்களை திசை திருப்பும் பணியைச் செய்து முடித்திருக்கிறது.

2010 ஆம் ஆண்டு ,2015 ஆம் ஆண்டு, 2020 ஆம் ஆண்டு ஆசிய ஜனாதிபதித் தேர்தல் காலங்களின் போதெல்லாம் ஒரு தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கருத்து மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்ட போதிலும் அது “புறம் குடத்த தண்ணீராய் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட பின்னணியில் , கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியத்துக்கு ஏற்பட்ட சீரழிவின் பின்னணியில் 10 கட்சி கூட்டு என்ற ஒன்றை தற்போது எந்த வகையான வீரியமுமின்றி ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

இது “கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்” என்ற தமிழ் பழமொழியை நினைவூட்டுகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் போர்வழி தந்த பெருவலியை,சொல்லொணாத் துன்பத்தை தமிழ் மக்கள் சுமந்து நின்ற நிலையில் தமிழரின் இலட்சியப் பாதையில் பெரும் இடைவெளி ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் அந்த இடைவெளியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் சக்தி நிரப்பும் என தமிழ் மக்கள் மாமலையாக நம்பியிருந்தனர்.

அந்தக் கட்டத்தில் வழக்கறிஞர் எம். ஏ. சுமந்திரன் கட்சிக்குள் நுழைத்துவிடப்படுகிறார். இவ்வாறு உள்ளே நுழைந்த சுமந்திரன் படிப்படியாக கட்சிக்குள் தனது ஆளுமையை விஸ்தரித்துக் கொண்டார் . மும்மொழிகளும் அவருக்குத் தெரிந்திருந்த நிலையில் கட்சிக்குள அவருடைய கை ஓங்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.

அதேவேளை மும்மொழிகளும் தெரிந்திருந்தவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த வகையில் அவருக்குச் சவாலாய் இருக்கக்கூடிய வாய்ப்புடையவராய் காணப்பட்டார்.

ஆனால்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதோடு அவரது கூட்டளிகளும் கூடவே வெளியேறும், வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டது.

பொறுமையாக இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சககூட்டாளிக் கட்சியினருடன் இணைந்து சுமந்திரனைக் களையெடுப்பதற்குப் பதிலாக அவருக்கு வசதியாக இவர்கள் வெளியேறியது மிகப்பெரும் அரசியல் வரலாற்றுத் தவறாகும்.

அன்று உண்மையில் தமிழ் மக்களுடைய தேசிய நலனையும் தேசிய அபிலாசையையும் கருத்தில் கொண்டு தனிமனித கதிரை ஆசையை துறந்து , திறந்த மனதுடன் மக்களுக்கான சேவையை செய்ய நினைத்திருந்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேவர வேண்டி இருக்காது. மாறாக அதற்க்குள் இருந்துகொண்டே இத்தகைய புல்லுருவிகளுக்கு எதிராக போராடி களைபிடுங்கி இருக்க முடியும்.

மேற்படி கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து எதிர்ப்புணர்வு கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், விக்னேஸ்வரன் போன்ற அணியினர் படியாக வெளியேறி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சுமந்திரனை பலப்படுத்தும் பணியை நிறைவேற்றினர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்து கூட்டமைப்புக்குள் சுமந்திரனை வெளியேற்றியிருக்க வேண்டிய பணியை செய்யத் தவறினார்.

கூட்டமைப்பைவிட்டு வெளியே வராமல் அதற்க்குள் நின்று போராடி இருக்க வேண்டிய கஜேந்திரகுமார் அதனைவிட்டு வெளியேறியதன் மூலம் புல்லுருவிகளின் வளர்ச்சிக்கு தன்னை அறிந்தோ, அறியாமலோ துணை போய்விட்டார். சிங்கள தேசம் எதை விரும்பியதோ அதையே இவர்கள் செய்து அவர்களுக்கு சேவகம் செய்து விட்டனர்.

இவ்வாறு சொந்த புத்தியும் இல்லாமல் பிறர் புத்தியும் கேளாமல் கூட்டமைப்பைவிட்டு வெளியேறி ஏற்கனவே தமிழ் மக்களால் பல பத்தாண்டுகளுக்கு முன் நிராகரிக்கப்பட்டிருந்த தனது பாட்டனாரின் கட்சியை தூசுதட்டி , அதற்கு உயிர் கொடுக்க ஆரம்பித்தார் கஜேந்திரகுமார்.

அத்தோடு தான் மட்டுமே கொள்கைக்காக நிற்பதாகவும் ஏனையோர் கொள்கையை கைவிட்டுவிட்டார்கள் என்றும் கூறத் தொடங்கினார். “தமிழருடைய தாகம் தமிழீழத் தாயகமே” என்ற கொள்கைதான் கஜேந்திரகுமாரின் உடையது கொள்கை என்றால் அதற்கான அவருடைய அரசியல் வேலைத் திட்டம் என்ன என்பதை அவர் இதுவரை முன்வைக்கவில்லை.

அவருடைய வெளியேற்றம்தான் கூட்டமைப்புக்குள் சுமந்திரன் உடைய வளர்ச்சிக்கு அத்திவாரம் இட்டது. ஏனய கூட்டமைப்புத் தலைவர்களில் அனேகமானோர் புறமொழி அறிவற்றவர்கள் காணப்பட்டதால் சுமந்திரனால் கட்சிக்குள் இருந்தவர்களை மிரட்டி பணியவைக்க முடிந்தது. ஆனால் கஜேந்திரகுமார் கூட்டமைப்புக்குள் இருந்திருந்தால் இது சுமந்திரனுக்கு இலகுவாக சாத்திய ப்பட்டிருக்காது.

அந்தக் காலகட்டத்தில் பதவியிலிருந்த ராஜபக்சக்கள் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க் குற்றம், சர்வதேச போர்க்குற்ற விசாரணை போன்ற சிக்கல்களுக்குள் மாட்டப்பட்டிருந்த காலம். அது தமிழர்களுக்கு ஒரு நீதியைப் பெற்றத்தக்க வாய்ப்புள்ள காலமாகவும் காணப்பட்டது.

ஆனால் இத்தகைய நல்ல தருணத்திற்தான் 2015 இல் பொதுத் தேர்தல் வந்தது தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவோம் , போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் சிங்களத் தலைவர்களையும், இராணுவ அதிகாரிகளையும் ஏற்றுவோம் என முழக்கமிட்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை பாதுகாத்து தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுத்தருவர் என்று மக்கள் நம்பினார்கள். அதுபோலவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் செயலாளர் மாவையும் தைப்பொங்கலுக்கு தீர்வுத்திட்டம் ,புது வருடத்திற்குத் தீர்வு,இந்த வருட இறுதிக்குள் தீர்வு என்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் பல தடவை முன் வைத்து விட்டார்கள். ஆனால் நடந்தது ஒன்றும் இல்லை. மாறாக தீய சக்திகள்தான் கட்சிக்குள் ஆழஅகல வளரத்தொடங்கினர்.

போர்க்குற்ற சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவதற்கு பதிலாக போர்க்குற்றம் புரிந்த தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கு “பீல்ட் மார்ஷல்” பட்டத்தைப் பெற்றுக் கொடுக்கும் பெரும் சாதனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவமானகரமான சாதனையாக நிறைவேற்றியது.

“புதிய அரசியலமைப்பு வராவிட்டால் நான் பதவி விலகுவேன்” என்று சுமந்திரன் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளுக்கு பேட்டியும் வழங்கினார். இவ்வாறு கூட்டமைப்புக்குள் இருக்கின்ற சில வாய்வீச்சு அரசியல்வாதிகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான வஞ்சின வார்த்தைகளை பல சந்தர்ப்பங்களில் பொது வெளியில் ஆக்ரோசமாக வெளியிட்டனர்.

ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இது நடக்காவிட்டால், இது நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுவேன் என வஞ்சினம் கூறுவார்கள் .ஆனால் வாயிலிருந்து வந்த வஞ்சினம் நெஞ்சில் இருந்திருக்க வில்லை. மாறாக இந்த வசனங்கள், வஞ்சினங்கள் மக்களுக்கு வஞ்சகம் செய்யவே பயன்பட்டது.

2015 வரை ராஜபக்சக்களை போர்க்குற்ற விசாரணையில் மாட்டுவோம் அவர்களை கூண்டில் நிறுத்தவும் என்றெல்லாம் கூறி காலத்தை கடத்தியவர்கள் தொடர்ந்து மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை தந்தவர்கள் பின்பு 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பழைய பல்லவி ஒன்றை தொடங்கினர்.

சிங்கள ஆளும் வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்தனர். இவர்கள் அமைத்த நல்லாட்சி அவர்களுக்கு நல்ல ஆட்சியாக இருந்தது. ஆனால் அது தமிழ் மக்களுக்கு இனகொலை ஆட்சியாக மாறியது.

மாறாக சிங்கள தேசம் சர்வதேசப் பரப்பில் ஒவ்வொரு தடவையும் ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் பேரினவாத அரசு காலத்தை கடத்திக் கொண்டிருக்க அந்த பேரினவாத அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்து ஒவ்வொரு தடவையும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்து கொண்டிருந்தது.

தமிழ் மக்களின் வாக்குகளை கொண்டு தமிழ் மக்கள் மக்களின் கண்களை குத்தி தமிழ் மக்களை குருடாக்கி விடும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு கூட்டமைப்பினர் துணை போயினர் . நல்லாட்சி அரசாங்கத்தை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு ஒரு குண்டுமணியை தானும் பெற்றுக்கொடுக்க இந்த கூட்டமைப்பால் முடியவில்லை .

அதே நேரத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் “கொள்கை , கொள்கை”என்றும் “ஒரு நாடு இரு தேசம்” (இறுதியாக இன்று “ஒரு நாடு பல தேசம்”என்றும் கூறுகிறார்) என்றும் “பூகோள அரசியல் ” என்றும் தன் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறிவருகிறார்.

இறுதியில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில் திரு. சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டது என்று ஒரு பெரும் பொய்யை மேடையில் அடித்துக் கூறினார். அதற்கு ஆதாரமாக ஒரு காகிதக் கட்டை விசாரணை அறிக்கை என்று கூறி யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியற்துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கத்தின் கையில் கொடுத்தார். இது எத்தனை பெரிய ஏமாற்று . ஆனால் இன்று அதே சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐநா மனித உரிமை ஆணையத்தை நோக்கி பெரும் யாத்திரை செய்யத் தொடங்கியிருக்கின்றார.

மதபோதகர் வேதம் ஓதுவார். ஆசிரியர் அறிவு புகட்டுவார். வேடர் வேட்டையாடுவார். இடையர் மந்தை மேய்ப்பார். இறைச்சிக் கடைக்காரர் பிராணி வெட்டுவார். தமிழின எதிரி தமிழினத்தை அழிப்பதற்கான தன் தொழில் செய்வார். இந்த வகையில் சிங்களத் தலைவர்கள் தமிழின இனவழிப்பு தொழிலை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள்.

ஆதலால் தன் தொழில் புரியும் , இனப்படுகொலை புலியும் சிங்கள தலைவர்களைப்பற்றி குறை சொல்வதற்கு அப்பால் நீண்ட பண்பாட்டு வளம் மிக்க தமிழ் தேசிய இனத்தை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பை தமிழ் தலைவர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாகும்.

உண்மையான நடைமுறை அர்த்தத்தில் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ தமிழ் தலைவர்கள் சிங்கள ஆட்சியாளர்களின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு துணை போனவர்களாகவே காணப் படுகிறார்கள் என்று வரலாறு அவர்களை எப்பொழுதும் வசைபாடும் என்று குறிப்பிட்டுள்ளார்.