உடல்களை அடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும்! மைத்திரி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் உலக சுகாதார அமைப்பின் நிலைப்பாட்டுக்கு இணங்குவதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் தி இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் அனைத்து நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அங்கம் வகிக்கும் தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டுள்ளமை அனைத்து தரப்பினரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளிடம் அடிப்பணியாது முஸ்லிம் மக்களின் சமய மற்றும் கலாச்சாரத்திற்கு அமைய அடக்கம் செய்யும் உரிமையை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.