பெருந்தொகை பணத்தை மக்களுக்கு தானமாக வழங்கும் ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பெருந்தொகை பணத்தை தானமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டு தினமான இன்று அவர் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாது இந்த பணத்தை தாம் சேகரித்தாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாது அதனை திறைசேரிக்கே அனுப்பி வைத்ததாகவும், பின்னர் இந்த பணத்தை கொண்டு வறியவர்களுக்கு உதவ முடியும் என நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் நாடாளுமன்ற நிர்வாகத்திடம் தம்மால் திருப்பி அனுப்பிய பணத்தை மீளத் தருமாறு கோரி பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மெய்யாகவே வறுமையில் வாடும் மக்களுக்கு இந்த பணத்தை தாம் வழங்க உள்ளதாகவும், பணத் தேவை உடையவர்கள் 0773624927 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் பணத்தேவை உண்டா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு பணம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் நாற்பது லட்சம் ரூபா பணம் இவ்வாறு பகிர்ந்தளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் அலைவரிசை ஊடாக மாதாந்தம் 2 – 3 லட்சம் பணம் கிடைப்பதாகவும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் பணம் கிடைப்பதாகவும் அவற்றையும் மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மிகவும் நல்ல எண்ணத்துடன் இந்த பண தன்சால் (பண தானம்) வழங்கப்படுவதாகவும், யாரையும் இழிவுபடுத்துவது தமது நோக்கமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம் பெற்றுக்கொள்வோரை விளம்பரப்படுத்த போவதில்லை எனவும் அந்த விபரங்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் திருமணம் முடிக்கவில்லை எனவும் மனைவி, பிள்ளைகள், ஆடம்பர செலவுகள் எதுவும் கிடையாது என்பதனால் பெருந்தொகை பணத்தை சேமித்து வைத்திருப்பதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் வாடகை வீட்டில் வாழ்வதாகவும் வாடகை வாகனமொன்றை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்று இன்னலுறுவோர், வறிய கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உதவுவதற்கு தாம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை காட்சிப்படுத்தி இந்தப் பணம் தேவையானவர்கள் அழைக்கலாம் என ரஞ்சன் ராமநாயக்க அந்தக் காணொளியில் கூறியுள்ளார்.

குஷான் திலகரட்ன என்ற தனது செயலாரை தொடர்பு கொண்டு பணத் தேவை பற்றி அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.