தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார்!விநாயகமூர்த்தி முரளிதரன்

தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தல்களை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை பலப்படுத்துவதற்காக இன்று கிளிநொச்சியில் முக்கிய சந்திப்புக்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

உண்மையில் கடந்த தேர்தலில் எமது கட்சிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் ஆதரவு வழங்கி இருந்தார்கள். உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இவ்வாறான நிலையில் எமது கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது. அதனை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

இதன்போது நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் போட்டியிடுவீர்களா..? தேசிய கட்சிகளுடன் இணைந்தா போட்டியிடுவீர்கள் எனவும் அவரிடம் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர்,

உண்மையில் மாகாண சபை தேர்தலில் போட்டியிட உள்ளோம். அதற்கான வேட்பாளர்களையும் தெரிவு செய்துள்ளோம். ஆனால் தேசிய கட்சியுடன் இணைந்து அல்ல. தமிழ் கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட தீர்மானித்துள்ளோம். தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சு வார்தைகளில் ஈடுபட்டு அனைவரையும் ஒன்றாக இணைத்து போட்டியிடுவது என்ற முடிவில் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றீர்கள் இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து போட்டியிட தயாராக உள்ளீர்களா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.. அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் அரசியல்களை விட்டு தற்போது காணப்படும் சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.