சிறீலங்காவில் இராணுவமயமாக்கல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது!ஊடகவியலாளர்கள் அமைப்பு விசனம்

(நா.தனுஜா)
கொவிட் – 19 நெருக்கடியைக் கையாள்வதற்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இராணுவ உத்தியோகத்தர்கள் இணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளமையின் ஊடாக நாடளாவிய ரீதியில் இராணுவமயமாக்கல் செயற்பாடு விரிவுபடுத்தப்படுகின்றது என இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் நோக்கில், அச்செயற்பாடுகளுக்கான இணைப்பு அதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ஒரு இராணுவ அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மையத்தின் தலைவரும் முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

நாட்டை முழுமையாக இராணுவமயப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு அமைந்துள்ளதாகப் பலரும் விசனம் வெளியிட்டுவரும் நிலையில், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஏ.பி.ஐ.பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேஜர் ஜெனரல் ஏ.பி.ஐ.பெர்ணான்டோ பிரித்தானியாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பணியாற்றிய போது, உயர்ஸ்தானிகரகத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டவர்களை அச்சுறுத்தும் வகையிலான சைகையொன்றை வெளிப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரித்தானிய நீதிமன்றத்தில் அவருக்கெதிராக வழக்குத்தொடரப்பட்டது.

இத்தகைய பின்னணியில் அவர் புத்தளம் மாவட்டத்திற்கு இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது.

‘இணைப்பு அதிகாரிகளில் ஒருவரான பிரியங்க பெர்னாண்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமான சைகையை வெளிப்படுத்தியமையினால் பொது ஒழுங்கு குற்றத்திற்கான பிரித்தானிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்’ என்று அந்தப் பதிவில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதேவேளை ‘கொவிட் – 19 நெருக்கடியைக் கையாள்வதற்கான இந்த நியமனங்களின் ஊடாக நாடளாவிய ரீதியில் இராணுவமயமாக்கல் செயற்பாடு விரிவுபடுத்தப்படுகின்றது’ என்று இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.